தூத்துக்குடியில் புதிதாக தற்காலிக மார்க்கெட் தொடக்கம் - மக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க ஏற்பாடு
தூத்துக்குடியில் மக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் புதிதாக தற்காலிக மார்க்கெட் தொடங்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் மக்கள் வெளியில் வர அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் காய்கறி மார்க்கெட்டுக்கு மக்கள் அதிக அளவில் வருகின்றனர். இதனால் நீண்ட நேரம் காத்திருந்து பொருட்களை வாங்கி செல்லும் நிலை உள்ளது.
இதையடுத்து மக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கூடுதலாக தற்காலிக மார்க்கெட் அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தற்காலிக மார்க்கெட்டில் உள்ள சுமார் 30 கடைகள் வ.உ.சி. கல்லூரி அருகே உள்ள இணைப்பு சாலைக்கு மாற்றப்பட்டன.
அந்த சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மக்கள், அந்த மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதனால் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவது தவிர்க்கப்பட்டு உள்ளது.
கிருமி நாசினி தெளிப்பு
மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. தூத்துக்குடி புதிய துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
மளிகை கடைகளில் சமூக இடைவெளி முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்பது குறித்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும் கடைகளில் கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்தும் தீவிரமாக கண்காணிக் கின்றனர்.
Related Tags :
Next Story