கிரிவலப்பாதை முகாமில் தங்கியுள்ள வெளிமாவட்டத்தினர் ஊருக்கு செல்ல ஏற்பாடு - கலெக்டர் கந்தசாமி தகவல்


கிரிவலப்பாதை முகாமில் தங்கியுள்ள வெளிமாவட்டத்தினர் ஊருக்கு செல்ல ஏற்பாடு - கலெக்டர் கந்தசாமி தகவல்
x
தினத்தந்தி 15 April 2020 4:30 AM IST (Updated: 15 April 2020 4:23 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை கிரிவலப்பாதை முகாமில் தங்கிஉள்ள வெளிமாவட்டத்தினர் ஊருக்கு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கந்தசாமி தெரிவித்தார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஆதரவற்றவர்களுக்காக சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை நேற்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அங்கு மேற்கொள்ளப்பட்டு உள்ள பணிகள் குறித்து கேட்டறிந்தார். முன்னதாக கலெக்டர் கிரிவலப்பாதையில் இடுக்குப் பிள்ளையார் கோவில் அருகில் சென்றபோது வயதான மூதாட்டி ஒருவர் சாலையில் அமர்ந்திருந்தை பார்த்து வாகனத்தை நிறுத்தச்சொல்லி அவரை தனது காரில் ஏற்றி சிறப்பு முகாமிற்கு அழைத்து வந்தார்.

அங்கு வைத்து மூதாட்டியிடம் அவரது விவரங்களை கேட்டறிந்தார். அப்போது அவர் தனது பெயர் ரத்தினாம்பாள் என தெரிவித்தார். மற்ற விவரங்கள் குறித்து அவருக்கு தெரிவிக்க முடியவில்லை. பின்னர் அந்த மூதாட்டிக்கு கலெக்டர் தலையணை, தரை விரிப்பு, போர்வை, சோப்பு, பேஸ்ட், பிரஷ் வழங்கினார். மேலும் சிறப்பு முகாமில் தங்கியுள்ள அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு உடனடி ஏற்பாடு செய்தார். பின்னர் அங்கிருந்த ஆதரவற்றவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து கலெக்டர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் கிரிவலப் பாதையில் ஆதரவற்ற முதியோர், வெளியூர்களிலிருந்து வந்து திரும்பிச் செல்ல முடியாமல் சாலையில் தங்கி இருந்தவர்கள், கடந்த வாரம் மழை வந்ததால் சிரமப்பட்டுள்ளார்கள். இதனை அறிந்து உடனடியாக கிரிவலப் பாதையில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டது.

முகாமில் 60 நபர்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. இம் முகாமில் உள்ளவர்களில் சிலர் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து வந்திருப்பதால் மீண்டும் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்புபவர்களை வாகனம் மூலம் அனுப்பி வைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் காய்கறி சந்தைகள், மளிகை கடைகள், சூப்பர் மார்கெட் மூடப்பட்டு உள்ளது. வாகனம் மூலம் அனைத்து பகுதிகளிலும் காய்கறி விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அரிசி, பருப்பு உள்பட அனைத்தும் வீடுகளுக்கு நேரடியாக சென்று வினியோகம் செய்வதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியில் வராமல் பாதுகாப்பாக இருப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 12 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் முழுமையாக குணமடைந்து தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் 11 பேர் கொரோனா சிறப்பு பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நபர்கள் வசித்து வந்த பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக கொண்டு வரப்பட்டு அங்கு வசிக்கும் 80 ஆயிரம் பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story