அரியலூர் பகுதியில் கொடிகட்டி பறக்கும் புகையிலை பொருட்கள் விற்பனை - நடமாடும் ‘கடை’களிலும் கிடைக்கிறது
அரியலூர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை கொடிகட்டி பறக்கிறது. அவற்றை சிலர் நடமாடும் கடை போல் செயல்பட்டும் விற்பனை செய்து வருகின்றனர்.
அரியலூர்,
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகமாக வெளியில் சுற்றுவதை தவிர்க்கும் வகையில் 3 வண்ண அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரியலூரில் உள்ள பள்ளிவாசல் தெரு, சின்னகடைத்தெரு, மார்க்கெட் தெரு ஆகிய கடைவீதிகளில் சிகரெட் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனை கொடிகட்டி பறக்கிறது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக குறைந்த அளவே புகையிலை பொருட்கள் வருவதால், வியாபாரிகள் புகையிலை பொருட்களின் விலையை பன்மடங்கு உயர்த்தி விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக கிராமப்புறங்களில் புகையிலை பொருட்களை பயன்படுத்துபவர்கள், அதிக விலைக்கு அவை விற்கப்பட்டபோதும், அதனை வாங்கிச்செல்கின்றனர். இதனால் கிராமப்புறங்களில் கடைகள் வைத்திருப்பவர்கள் பலர், நகர்ப்புறங்களில் புகையிலை பொருட்களை விற்கும் கடைகளுக்கு வந்து வாங்கிச் செல்கின்றனர். அந்த கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படுவதில்லை.
மேலும் அரியலூர் நகரில் தற்போதைய நிலவரப்படி 20 ரூபாய்க்கு விற்ற புகையிலை பொருள் ரூ.100 வரையும், 5 ரூபாய் புகையிலை பொருள் 25 ரூபாய்க்கும், 10 ரூபாய் புகையிலை பொருள் 50 ரூபாய்க்கும், 10 ரூபாய் சிகரெட் 20 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அருகருகே 2 கடைகள் இருந்தால், அதில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடையை விட, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
தற்போது காய்கறிகள் நடமாடும் வாகனத்தில் விற்பனை செய்வதைபோல், புகையிலை பொருட்களை விற்பனை செய்ய சிலர் நடமாடும் கடையாக மாறிவிட்டனர். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சிலர் தங்களது கைப்பைகளில் வைத்துக்கொண்டு, பொருட்கள் வாங்க வந்தவர்கள் போல் கடைவீதிகளில் குறிப்பிட்ட சில இடங்களில் நின்று கொண்டு இருக்கின்றனர். நிரந்தர வாடிக்கையாளர்கள், அந்த நபர்கள் நிற்கும் இடம் தேடிச்சென்று புகையிலை பொருட்களை வாங்குகின்றனர். நடமாடும் கடை போன்ற விற்பனையாளர்கள் மணிக்கொருமுறை இடத்தை மாற்றிக்கொண்டு, யாருக்கும் சந்தேகம் எழாதவாறு பார்த்து கொள்கின்றனர்.
இது ஒருபுறம் என்றால், கள்ளச்சந்தையில் விற்கப்படும் மதுபாட்டில்களின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளில் 110 ரூபாய்க்கு விற்கப்பட்ட மதுபாட்டில்கள், ரூ.300, ரூ.500 என்ற நிலையில் இருந்து தற்போது ரூ.700-ஐ தொட்டுள்ளது. இதனால் பலர் சாராயத்தை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவுதலை தடுக்க பொதுமக்களின் நடமாட்டத்தை குறைக்கும் பணியில் முழுவீச்சில் போலீசார் ஈடுபட்டுள்ளதால், அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சிலர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிக விலைக்கு விற்று நல்ல லாபம் பார்த்து வருகின்றனர். எனவே போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story