வேலூர் மாவட்டத்தில் டோர்டெலிவரி மூலம் இறைச்சி விற்பனை செய்யும் வசதி - இன்று முதல் அமல்
வேலூர் மாவட்டத்தில் டோர்டெலிவரி மூலம் இறைச்சி விற்பனை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலூர்,
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வேலூர் மாவட்டத்தில் அனைத்து வகை இறைச்சி மற்றும் மீன் விற்பனையாளர்கள் சங்கத்தினர் தாமாகவே முன்வந்து தங்களது கடைகளை அடைப்பதாக தெரிவித்ததன் அடிப்படையில் கடந்த சில நாட்களாக இறைச்சிக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
தற்போது தமிழக அரசு ஏற்கனவே பிறப்பித்திருந்த ஊரடங்கு உத்தரவு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு ஊடரங்கு உத்தரவினை மே மாதம் 3-ந் தேதி வரையில் நீட்டித்துள்ளதாலும் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் வேலூர் மாவட்ட அனைத்து இறைச்சி விற்பனையாளர்கள் சங்கத்தினர் தங்களது விற்பனையை தொடர்வதற்கு அனுமதி கேட்டனர்.
மேலும் அவர்கள், அவ்வாறு விற்பனை செய்யும்பொழுது எக்காரணம் கொண்டும் கடைகளில் இறைச்சி மற்றும் மீன் விற்பனை நடத்தப்படாது என்றும் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே ஆர்டரின் பேரில் நேரடியாக சென்று விற்பனை செய்யப்படும் எனவும், இதனை மீறி செயல்படும் கடைகளின் மீது மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுவோம் என்றும் தெரிவித்தனர்.
அதனை ஏற்று இன்று (புதன்கிழமை) முதல் வேலூர் மாவட்டத்தில் அனைத்து இறைச்சி மற்றும் மீன் விற்பனைகள் ஆர்டரின் பேரில் வீடுகளுக்கு சென்று கொடுக்கும் டோர்டெலிவரி என்ற விற்பனை முறை நடைமுறைக்கு வருகிறது.
இந்த கடைகள் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே ஆர்டரின் பேரில் வீடுகளுக்கு கொண்டு சென்று கொடுக்க வேண்டும். இந்த கால நேரத்தினை அவர்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் ஒவ்வொரு வியாபாரியிடமும் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு தங்களுக்கு வேண்டியவற்றை ஆர்டர் செய்து தங்களது வீடுகளிலேயே பெற்றுக் கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் கடைகளில் விற்பனை செய்யப்படமாட்டாது.
கடைகளில் இந்த உத்தரவை மீறி விற்பனை செய்வது தெரியவந்தால் கடைகள் மூடி ‘சீல்’ வைக்கப்படும். அந்த கடைகள் வருகிற ஆகஸ்டு மாதம் 3-ந் தேதி வரையில் திறப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும் குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
பேக்கரி கடைகளில் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படும். அங்கு தேநீர், குளிர்பானங்கள் அருந்துவதற்கோ, ஸ்நாக்ஸ் போன்றவை சாப்பிடுவதற்கோ அனுமதிக்கப்படாது. விற்பனை செய்யும் முன்பு கடைகளில் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story