நல்லம்பள்ளி பகுதியில் பறிக்க கூலியாட்கள் வராததால் செடியில் அழுகும் தக்காளி - விவசாயிகள் கவலை


நல்லம்பள்ளி பகுதியில் பறிக்க கூலியாட்கள் வராததால் செடியில் அழுகும் தக்காளி - விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 15 April 2020 3:30 AM IST (Updated: 15 April 2020 9:30 AM IST)
t-max-icont-min-icon

நல்லம்பள்ளி பகுதியில் கூலியாட்கள் கிடைக்காததால் செடியில் தக்காளி அழுகி வீணாகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி, பரிகம், தொப்பூர், டொக்குபோதனஅள்ளி, சாமிசெட்டிப்பட்டி, ஏலகிரி, மானியதஅள்ளி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு அறுவடை செய்யப்படும் தக்காளிகளை விவசாயிகள் வாகனங்கள் மூலம் பாலக்கோடு, தர்மபுரி மார்க்கெட் மற்றும் கோவை, திருச்சி, ஓமலூர் உள்ளிட்ட காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் காரணமாக விவசாய பொருட்கள் கொண்டு செல்ல அரசு தடை இல்லை என அறிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளதால் விவசாய வேலைக்கு தொழிலாளர்கள் யாரும் வருவது இல்லை.

இதனால் நல்லம்பள்ளி பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அவற்றை பறிக்க கூலியாட்கள் வராததால் தோட்டத்திலேயே விட்டுள்ளனர். ஒரு சில விவசாயிகள் அதிக கூலி கொடுத்து தக்காளியை அறுவடை செய்து மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். ஆனால் தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததால் அவர்கள் செடிகளில் இருந்து தக்காளியை பறிக்காமல் விட்டுள்ளனர்.

இதன் காரணமாக செடிகளில் தக்காளிகள் அழுகி கீழே விழுந்து உள்ளன. ஊரடங்கு உத்தரவுக்கு முன்பு 30 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.400 முதல் ரூ.600 வரை விற்பனை ஆனது. ஆனால் தற்போது குறைந்த விலைக்கு விற்பனையாகிறது. இந்த கடும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ஊரடங்கு உத்தரவு எதிரொலியால் தற்போது தோட்டத்தில் தக்காளியை பறிப்பதற்கு கூலியாட்கள் கிடைப்பது இல்லை. எனினும் கிடைக்கும் ஆட்களுக்கு அதிக கூலி வழங்கி தக்காளி பறிக்கும் பணியில் ஈடுபடுகிறோம். ஆனால் தற்போது 30 கிலோ கொண்ட பெட்டி ரூ.150 முதல் ரூ.200 வரை விலை போகிறது. விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வியாபாரிகள் வாங்கி வெளியில் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

விலை வீழ்ச்சியால் தக்காளியை பறிக்காமல் தோட்டத்திலேயே விட்டு விட்டோம். பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து சாகுபடி செய்த தக்காளி வீணாவதை கண்டு எங்களுக்கு மனவேதனையாக உள்ளது. எனவே தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story