குமரி மாவட்டத்தில், மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது
குமரி மாவட்டத்தில் மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனா உறுதியானது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 15 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. இந்தநிலையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முதலில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 5 பேருடன் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலையில் தொடர்பில் இருந்தவர்கள் யார்? யார்? என்பதை கண்டறிந்து சுகாதாரத்துறையினர் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுதவிர ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் ஆகியவற்றுடன் சிகிச்சைக்கு வருபவர்கள் அனைவரையும் உள்நோயாளியாக அனுமதித்து அவர்களது சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பலர் தாங்களாகவே முன்வந்து பரிசோதனையும் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் கடுமையான காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுடன் அவதிப்பட்ட 10 பேரை தொற்று நோய் பிரிவு வார்டு, தனிமைப்படுத்துதல் வார்டு, தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். அவர்களில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணும் ஒருவர் ஆவார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே நிமோனியா காய்ச்சல் காரணமாக இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இறந்த பெண்ணின் சளி மற்றும் ரத்த மாதிரி எடுத்து நெல்லை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது நேற்று இரவு தெரிய வந்தது. அதையடுத்து அவருடைய உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடந்த 12-ந் தேதி சளி மற்றும் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்ட 23 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. நேற்று முன்தினமும் பலருக்கு சளி மாதிரி பரிசோதனைக்கு நெல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அதில் மணிக்கட்டிப் பொட்டல் அனந்தசாமிபுரத்தைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பெண், முதன்முதலில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவரான சென்னை விமான நிலைய ஊழியரின் பக்கத்து வீட்டுக்காரர் ஆவார்.
இதையடுத்து அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி கொரோனா நோயாளிகளுக்கான தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றுள்ள இந்த பெண்ணுடன் சேர்த்து குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி தொற்று நோய் சிகிச்சை வார்டில் கடுமையான காய்ச்சல் உள்ளிட்ட சில நோய் அறிகுறிகளுடன் 5 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களது சளி மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் 18 பேர் சந்தேகத்தின்பேரில் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்களது சளி மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவர்களில் 7 மாத குழந்தை, 12, 15 வயது சிறுவர், சிறுமிகளும் அடங்குவர். குமரி, நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். இதுதவிர சுகாதாரத்துறை மூலம் பலருக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முதன்முதலில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 5 பேருக்கு மீண்டும் ரத்தம் மற்றும் சளி பரிசோதனைக்காக நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டன. அவர்களுக்கு நேற்று இரவு வரை பரிசோதனை முடிவுகள் வரவில்லை.
Related Tags :
Next Story