திருவாரூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற மேலும் 4 பேர் குணம் அடைந்தனர் - 38 பேருக்கு தீவிர சிகிச்சை
திருவாரூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற மேலும் 4 பேர் குணம் அடைந்தனர். 38 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவாரூர்,
இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இந்தநிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று இருப்பது பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டது. இவர்கள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறப்பு கொரோனா வார்டில் சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் முதல் கட்டமாக 14 நாட்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்தவர்களின் ரத்த பரிசோதனை 2 முறை எடுக்கப்பட்டது. இதில் 3 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து விடுபட்டு குணமடைந்தது தெரியவந்தது. இதேபோல் 2-வது கட்ட பரிசோதனையில் மேலும் 4 பேர் குணமடைந்துள்ளனர்.
இதையடுத்து இவர்கள் பாதுகாப்பு கருதி 2 வாரங்களுக்கு மத்திய பல்கலைக்கழகத்தில் செயல்படும் கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.
தற்போது திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் நாகை மாவட்டத்தை சேர்ந்த 29 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் இங்கு 38 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்ததகவலை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துகுமரன் கூறினார்.
Related Tags :
Next Story