கள்ளத்தொடர்பு விவகாரம்: கணவரின் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி, மகன் கைது
கள்ளத்தொடர்பு விவகாரத்தால் கணவரின் கழுத்தை நெரித்துக் கொன்ற மனைவி, மகனை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் அருகில் உள்ள காணமலை கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 40). இவருடைய மனைவி ராஜம்மாள். இவர்களுக்கு மாதவன் (15), அரவிந்தன் (10) என இரு மகன்கள் உள்ளனர். ராஜம்மாளுக்கும், கணவர் குமாருடைய அண்ணன் சேட்டு என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த குமார், 2017-ம் ஆண்டு சேட்டுவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே, 4-ந் தேதி அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் நிலத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து ஜமுனாமரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குமார், கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து ஜமுனாமரத்தூர் போலீசார் நேற்று முன்தினம் காலை குமாரின் மனைவி ராஜம்மாள், மகன் மாதவன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் ராஜம்மாளும், மகன் மாதவனும் சேர்ந்து குமாரின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டனர். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல்கள் கிடைத்தன.
விறகு கட்டையால் தாக்கினர்
ராஜம்மாள் சிலருடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கலாம் என குமாருக்கு சந்தேகம் இருந்து வந்தது. அவர் மதுபானத்தைக் குடித்து விட்டு வந்து அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து, அடித்து உதைத்துக் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜம்மாள், தன்னுடைய மூத்த மகன் மாதவனுடன் சேர்ந்து கணவர் குமாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதன்படி 3-ந்தேதி குடிபோதையில் வந்து தகராறு செய்த குமாரை, ராஜம்மாள் விறகு கட்டையால் தலையில் தாக்கினார். அதில் படுகாயம் அடைந்த அவர் சுருண்டு கீழே விழுந்தார். அவரை ராஜம்மாளும், மாதவனும் சேர்ந்து கயிறால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் யாருக்கும் தெரியாமல் இரவில் குமாரின் பிணத்தை தூக்கி சென்று அதே கிராமத்தை சேர்ந்த ஒருவரின் நிலத்தில் வீசி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இந்த நிலையில் தான் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story