நடமாடும் விற்பனை நிலையங்களால் ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் கூட்டம் குறைந்தது
நடமாடும் விற்பனை நிலையங்களால் ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் கூட்டம் குறைந்தது.
ஈரோடு,
ஊரடங்கால் ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக ஈரோடு பஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அங்கு தொடக்கத்தில் பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வந்து காய்கறிகளை வாங்கி சென்றனர். இதனால் பொதுமக்களை மேட்டூர்ரோட்டிலேயே வரிசையாக நிற்க வைத்து, மார்க்கெட்டிற்கு அனுமதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன்பிறகு கூட்ட நெரிசல் குறைந்தது.
இந்தநிலையில் மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும், நீண்ட தூரம் பொதுமக்கள் பயணம் செய்வதை தவிர்க்கும் வகையிலும் நடமாடும் காய்கறி விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. இதன்மூலமாக வாகனங்களில் காய்கறி பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றதும் நடமாடும் காய்கறி விற்பனை நிலையங்களை அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதன் காரணமாக மார்க்கெட்டுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஈரோட்டில் நேற்று நடந்த மார்க்கெட்டிலும் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்கி சென்றார்கள். மேலும், காலை 7 மணிக்கு வெயிலின் தாக்கம் தொடங்கி விடுகிறது. மார்க்கெட் 9 மணி வரை செயல்படுவதால், வியாபாரிகள் வெயிலில் உட்கார்ந்து வியாபாரம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
Related Tags :
Next Story