கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் 18 பேரும் நல்ல நிலையில் உள்ளனர் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் 18 பேரும் நல்ல நிலையில் உள்ளனர் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 15 April 2020 10:45 PM GMT (Updated: 15 April 2020 7:44 PM GMT)

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 18 பேரும் நல்ல நிலையில் உள்ளனர் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 26 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் ஏதேச்சையாக சந்தித்தவர்கள் போன்று குறைந்த தொடர்பு உடையவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு உள்ளது.

அவர்களில் இதுவரை சுமார் 400 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

மேலும் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளில் மே மாதம் 3-ந் தேதி வரை தொடர்ந்து கிருமி நாசினி தெளிப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும், காய்ச்சல், சளி, இருமலுடன் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

மத்திய அரசு தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள சிறு, குறு தொழில்கள் தொடங்க அனுமதி அளித்து உள்ளது. அதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 2 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மற்ற 18 பேரும் நல்ல நிலையில் உள்ளனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story