அந்தியூர் பகுதியில் ஊரடங்கால் கால்நடைகளுக்கு தீவனமாகும் சுரைக்காய் - விவசாயிகள் கவலை
ஊரடங்கால் அந்தியூர் பகுதியில் சுரைக்காய் கால்நடைகளுக்கு தீவனமாகிறது. செடியிலேயே சுரைக்காய் வீணாவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
அந்தியூர்,
அந்தியூர், எண்ணமங்கலம் கோவிலூர், மைக்கேல்பாளையம், அத்தாணி, ஆப்பக்கூடல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் சொட்டு நீர் பாசன முறையில் சுரைக்காய் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. பந்தல் அமைத்து கொடியை பரவவிட்டு விவசாயிகள் சுரைக்காய் செடியை வளர்த்து வருகிறார்கள். தற்போது சுரைக்காய் நன்கு விளைச்சலாகி அறுவடைக்கு தயாராக இருந்தது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், உரிய விலை கிடைக்காமலும், பறிக்க கூலித்தொழிலாளர்கள் இல்லாமலும் சுரைக்காய் வீணாக செடியிலேயே தொங்குகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
எங்கள் பகுதிகளில் விளையும் சுரைக்காயை மேட்டுப்பாளையம், திருப்பூர், ஈரோடு, மேட்டூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் நேரடியாக வந்து மொத்தமாக கொள்முதல் செய்வார்கள். ஆனால் ஊரடங்கு காரணமாக தற்போது வியாபாரிகள் யாரும் இங்கு வருவதில்லை. மேலும் கூலித்தொழிலாளர்களும் வேலைக்கு கிடைப்பதில்லை.
இதனால் சுரைக்காயை நாங்களே பறித்து 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள அந்தியூருக்கு கொண்டு வந்து வியாபாரம் செய்கிறோம். எனினும் நேரக்கட்டுப்பாடு காரணமாக அதிக அளவிலான சுரைக்காயை எங்களால் பறித்து வந்து விற்பனை செய்யமுடியவில்லை. இதனால் சுரைக்காய் செடியிலேயே முற்றி வீணாகி வருகிறது. பறிக்காமல் விட்டுவிட்டால் செடி பாதிக்கும் என்பதால் சுரைக்காயை பறித்து கால்நடைகளுக்கு உணவாக கொடுத்து வருகிறோம்.
ஒரு ஏக்கரில் சுரைக்காய் பயிரிட ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை செலவாகும். காய் ஒன்று ரூ.5 முதல் ரூ.15 வரை விற்பனை செய்தால் ரூ.1 லட்சம் முதல் ரூ.1½ லட்சம் வரை கிடைக்கும். ஆனால் தற்போது பறிக்க முடியாமலும், குறைந்த விலைக்கும் சுரைக்காயை விற்பனை செய்வதால் போட்ட முதலீட்டை கூட எடுக்க முடியாத சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டு உள்ளோம்.
எனவே சுரைக்காய் விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் மட்டுமே அடுத்த முறை எங்களால் சுரைக்காய் பயிரிட முடியும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story