விசைப்படகுகளுக்கான மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது; நிவாரண தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்த வலியுறுத்தல்
விசைப்படகுகளுக்கான 61 நாள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. இதையொட்டி தடைக்காலத்தை குறைக்கவும், நிவாரணத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தவும் மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ராமேசுவரம்,
தமிழகம் முழுவதும் பாக்ஜலசந்தி கடல் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் விசைப்படகு மீனவர் கள் மீன்பிடிக்க தடைக்காலம் தொடங்கி உள்ளது.
ஏப்ரல் மாதம் 14-ந் தேதி நள்ளிரவு 12 மணி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை அமலில் இருக்கும் இந்த தடைக்காலத்தின் போதுதான், மீன்கள் இனப்பெருக்கம் அதிகம் நடைபெறும். இந்த சீசனில் தான் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. இதனால் சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலும் தமிழக விசைப்படகு மீனவர் கள் மீன்பிடிக்க அரசால் தடை விதிக்கப் பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்த ஆண்டின் 61 நாள் மீன்பிடி தடைக்காலமானது நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் தொடங்கியது. தடைக்காலம் தொடங்கியதை தொடர்ந்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, ஏர்வாடி, சோழியக்குடி, சாயல்குடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள விசைப்படகுகளை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான மீனவர்களும் அதை சார்ந்த ஏராளமான தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே கொரோனா பரவலை தடுப்பதற்காக விடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் தடைக்காலம் தொடங்குவதற்கு முன் கூட்டியே கடந்த 23 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுக கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தடைக்காலமும் தொடங்கி விட்டதால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அது போல் இந்த ஆண்டு மட்டும் 61 நாள் தடைக் காலத்தை குறைக்கவும், தடை கால நிவாரண தொகை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கவும் வேண்டும் என்றும் விசைப்படகு மீனவர்கள் மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தடைக்காலம் தொடங்கியஉடனே மீனவர்கள் படகிலிருந்து மடி பலகை, ஐஸ்பாக்ஸ், வலை உள்ளிட்ட அனைத்து மீன்பிடி சாதனைங்களையும் வாகனம் மூலம் ஏற்றி வீடுகளுக்கு கொண்டு செல்வது வழக்கம். ஆனால் கொரோனா பரவலை தடுக்க விடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் படகிலிருந்த மீன்பிடி சாதனங்களை கூட வீடுகளுக்கு மீனவர்கள் எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story