கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக காஞ்சீபுரம் நகராட்சி 5 மண்டலங்களாக பிரிப்பு - மாவட்ட கலெக்டர் பொன்னையா தகவல்


கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக காஞ்சீபுரம் நகராட்சி 5 மண்டலங்களாக பிரிப்பு - மாவட்ட கலெக்டர் பொன்னையா தகவல்
x
தினத்தந்தி 16 April 2020 4:30 AM IST (Updated: 16 April 2020 3:56 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக காஞ்சீபுரம் நகராட்சி 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்களின் அவசர தேவைக்கு கட்டுப்பாட்டு அறை ‘வாட்ஸ்-அப்’ எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம்,

இதுகுறித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் நகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. அதில் கொரோனா வைரஸ் அதிகம் பாதிப்புக்குள்ளான 22, 24, 25, 28, 29, 32, 33, 34 மற்றும் 36 ஆகிய 9 வார்டுகள் மாவட்ட நிர்வாகத்தால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் செயல்பட்டு வந்த ராஜாஜி சந்தை மற்றும் ரெயில்வே சாலையில் செயல்பட்டு வந்த மளிகை கடைகள் வையாவூர் மற்றும் ஓரிக்கை பகுதிக்கு மாற்றப்பட்டு உள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தால் காஞ்சீபுரம் நகராட்சியின் மூலம் அண்ணா அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கட்டுப்பாட்டு அறையின் மூலம் நடமாடும் காய்கறி கடைகள், மளிகை பொருட்கள், பொது சுகாதார தூய்மை பணிகள், குடிநீர் விநியோகம், பாதாள சாக்கடை அடைப்புகள் போன்ற அடிப்படை வசதிகள் உடனுக்குடன் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீதமுள்ள 42 வார்டுகளும் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

42 வார்டுகளுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அவசர தேவைகளுக்காக பொதுமக்கள் சென்றுவர ஒவ்வொரு வார்டுகளிலும் தற்காலிக வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

5 மண்டலங்களாக பிரிப்பு

அதன்படி 42 வார்டுகளிலுள்ள குடியிருப்புகள் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலமும் ஒரு பாதுகாக்கப்பட்ட மண்டலமாக செயல்படும். ஒவ்வொரு மண்டலங்களிலும் உள்ள மளிகை கடைகள், மருத்துவமனைகள், இறைச்சி கடைகள், பால், தண்ணீர் கேன் கடைகள் மற்றும் ஏ.டி.எம். மையங்கள் இருக்கும் இடம் ஆகியவை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் தினமும் வெளியில் சென்று பொருட்கள் வாங்கி வர வெள்ளை நிற அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் தங்களின் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு வீட்டைவிட்டு ஒரு முறை மட்டும் வெளியில் சென்றுவர இளஞ்சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை, ஆரஞ்சு ஆகிய 5 நிற அட்டைகள் தயாரிக்கப்பட்டு ஒரு குடும்பத்துக்கு தலா ஒரு அட்டை வீதம் வழங்கப்படவுள்ளது. அட்டையில் குறிப்பிட்ட கிழமைகள் தவிர பிற நாட்களில் வீட்டைவிட்டு வெளியில் செல்ல அனுமதி இல்லை.

கட்டுப்பாட்டு அறை

பொதுமக்கள் தங்கள் வார்ட்டினை உள்ளடக்கிய மண்டல பகுதிக்குள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர். ஒரு மண்டல பகுதியில் இருந்து வேறு மண்டல பகுதிக்கு சென்று வர அனுமதி இல்லை. தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தங்களது மண்டல பகுதியிலேயே வாங்கிக் கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் மருத்துவ சேவை போன்ற மிகமுக்கியமான, இன்றியமையாத தேவைகளுக்கு அட்டையில் தெரிவிக்கப்பட்டுள்ள அந்தந்த மண்டல கட்டுப்பாட்டு அறை வாட்ஸ்-அப் எண்களை தொடர்பு கொண்டால் உடனடியாக நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story