சென்னையில் இருந்து ஜப்பானுக்கு சிறப்பு விமானம் - 118 பேருடன் புறப்பட்டு சென்றது
சென்னையில் இருந்து ஜப்பானுக்கு 118 பேருடன் சிறப்பு விமானம் புறப்பட்டு சென்றது.
ஆலந்தூர்,
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு மே 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. உள்நாட்டு, பன்னாட்டு விமான சேவையும் முற்றிலும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா விசாவில் வந்த பயணிகள், தங்கள் நாடுகளுக்கு திரும்பிச் செல்ல முடியாமல் பரிதவித்தனர். அந்ததந்த நாட்டு தூதரக அதிகாரிகள் ஏற்பாட்டில் மத்திய அரசின் அனுமதியுடன் சிறப்பு விமானத்தில் அவர்களது நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
அதன்படி சென்னையில் இருந்து அமெரிக்கா, பிரான்ஸ், மலேசியா, ஜப்பான், சிங்கப்பூர், பூடான் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிறப்பு விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழகத்தில் மேலும் தங்கி உள்ள வெளிநாட்டு பயணிகளை சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்துச் செல்லவும் மத்திய அரசு அனுமதி அளித்தது.
இதையடுத்து தமிழகத்தில் உள்ள ஜப்பான் நாட்டு பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக நேற்றுமுன்தினம் இரவு ஜப்பானில் இருந்து சிறப்பு விமானம் சென்னைக்கு வந்தது. ஆனால் விமானம் நடுவானில் பறந்துகொண்டு இருந்தபோது திடீரென எந்திரக்கோளாறு ஏற்பட்டதால் தாய்லாந்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் சிறப்பு விமானம் ரத்து செய்யப்பட்டது.
இந்தநிலையில் நேற்று ஜப்பான் விமானத்தில் ஏற்பட்ட எந்திரக்கோளாறு சரி செய்யப்பட்டு தாய்லாந்தில் இருந்து நேற்று மாலை சென்னை வந்தது. பின்னர் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து ஜப்பானுக்கு 118 பேர் சோதனைகளை முடித்துக் கொண்டு சிறப்பு விமானத்தில் புறப்பட்டு சென்றனர்.
Related Tags :
Next Story