அவசர பயணச்சீட்டு வாங்க குவிந்த பொதுமக்கள் - கலெக்டர் கண்டிப்பு
வெளியூர் செல்வதற்கு ஏராளமான பொதுமக்கள் குவிந்ததால், தேவையின்றி அவசர பயணச்சீட்டு வாங்க வரக்கூடாது என்று கலெக்டர் வீரராகவ ராவ் கண்டித்தார்.
ராமநாதபுரம்,
நாடு முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவின்படி அடுத்த மாதம் (மே) 3-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளதால் அவசர அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் செல்ல அவசர அனுமதி பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. மாநில அரசின் அறிவுறுத்தலின்படி இறப்பு, மருத்துவம் போன்றவைகளுக்கு மட்டும் இந்த சிறப்பு அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி மாவட்டத்தில் மேற்கண்ட கோரிக்கைகளுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் இலவச அனுமதி பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் இலவச அனுமதி பயணச்சீட்டு வழங்கக்கோரி ஏராளமானோர் விண்ணப்பங்களுடன் குவிந்தனர். இதை அறிந்து அங்கு வந்த கலெக்டர் வீரராகவ ராவ், ஒவ்வொருவரிடமும் விண்ணப்பிப்பதற்கான காரணங்களை விசாரித்தார். அப்போது ஒருசிலர் வெளியூரில் உடல்நிலை சரியில்லாதவர்களை பார்க்க செல்ல வேண்டும், பேரன்-பேத்திகளுக்கு எங்களை பார்க்காமல் உடல்நிலை பாதிக்கப்படுகிறது, எங்களை பார்க்க வேண்டும் என்று அழுகின்றனர், மகள்-மகனை பார்க்க செல்ல வேண்டும் என்று உடல்நிலை சரியில்லாதது போன்ற காரணங்களை கூறினர்.
இதனை கேட்ட கலெக்டர் வீரராகவ ராவ் மக்கள் நலனுக்காகத்தான் இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலில் என்ன காரணத்திற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். முக்கிய உறவினர் இறப்பு, அவசர மருத்துவ பரிசோதனை போன்றவற்றிற்காக மட்டுமே இந்த சிறப்பு அனுமதி பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. இதுபோன்ற தவிர்க்க கூடிய தருணங்களில் நீங்களாகவே தவிர்த்து உங்களுக்கும், உங்களை சார்ந்தவர்களுக்கும் நோய் பரவாமல் அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும். நாம் இவ்வாறு தேவையின்றி செல்வதால் நமக்கும், நம்மை சார்ந்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை உணர வேண்டும்.
இதுபோன்ற ஊரடங்கு சமயத்தில் இலவச அனுமதி பயணச்சீட்டு வாங்கி செல்வதை தங்களின் செல்வாக்காக காட்டிக்கொள்ள நினைக்கக்கூடாது. எனவே சின்ன சின்ன காரணங்களுக்கு எல்லாம் பயணச்சீட்டு கேட்டு வரக்கூடாது என்று கண்டித்தார். மேலும் அங்குள்ள அலுவலர்களிடம் மருத்துவம், இறப்பு போன்ற காரணங்களை தவிர பிற காரணங்களுக்கு பயணச்சீட்டு வழங்கக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story