புதிதாக 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி - கர்நாடகத்தில் சாவு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது


புதிதாக 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி - கர்நாடகத்தில் சாவு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது
x
தினத்தந்தி 16 April 2020 5:14 AM IST (Updated: 16 April 2020 5:14 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் மேலும் 19 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மேலும் 2 பேர் நேற்று மரணம் அடைந்ததை அடுத்து சாவு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

பெங்களூரு, 

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா வைரசுக்கு நேற்று முன்தினம் வரை 250 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். 10 பேர் மரணம் அடைந்து இருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் நேற்று புதிதாக மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பெங்களூருவில் சிகிச்சை பெற்று வந்த சிக்பள்ளாப்பூரை சேர்ந்த 65 வயது முதியவரும், பெலகாவியை சேர்ந்த 80 வயது மூதாட்டியும் நேற்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தனர்.

அந்த முதியவர் கடந்த 13-ந் தேதி பன்றி காய்ச்சலுடன் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளும் இருந்தன. இதன் மூலம் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 267 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதித்தோரின் விவரம் வருமாறு:-

பெங்களூருவை சேர்ந்த 59 வயது நபர் மூச்சுத்திணறல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. அவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் ஆகும். பாகல்கோட்டையை சேர்ந்த 52 வயது நபருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டியை சேர்ந்த 39 வயது போலீஸ்காரருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் கொரோனா பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த தொற்று அவரை தாக்கியுள்ளது.

மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு மாவட்டத்தை சேர்ந்த 41 வயது நபர், 30 வயது இளைஞர், 27 வயது இளைஞர், 35 வயது இளைஞர், 26 வயது இளைஞர், 23 வயது இளைஞர், 35 வயது இளைஞர், 28 வயது இளைஞர், 32 வயது இளைஞர் ஆகியோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இந்த 9 பேரும் அங்குள்ள தனியார் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள்.

ஒரு வயது ஆண் குழந்தை

மேலும் மைசூருவை சேர்ந்த 72 வயது முதியவருக்கு மூச்சுத்திணறல் பிரச்சினை இருந்து வந்தது. அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கலபுரகியை சேர்ந்த ஒரு வயது ஆண் குழந்தை, விஜயாப்புராவை சேர்ந்த 38 வயது பெண், 25 வயது இளைஞர் மற்றும் பெங்களூருவை சேர்ந்த 32 வயது பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. அவர்கள் ஏற்கனவே கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். விஜயாப்புராவை சேர்ந்த 28 வயது பெண், 80 வயது மூதாட்டி ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் அந்த 80 வயது மூதாட்டி மரணம் அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக பாதிக்கப்பட்ட அனைவரும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா நோயாளிகளில் இதுவரை 85 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

20 மாவட்டங்களில் கொரோனா

கர்நாடகத்தில் இதுவரை 20 மாவட்டங்களில் கொரோனா பரவியுள்ளது. இதுவரை அந்த வைரஸ் பாதித்தவர்களில் பெங்களூருவில் 71 பேர், மைசூருவில் 58 பேர், பெலகாவியில் 18 பேர், கலபுரகியில் 14 பேர், பாகல்கோட்டையில் 13 பேர், பீதரில் 13 பேர், சிக்பள்ளாப்பூரில் 11 பேர், பெங்களூரு புறநகரில் 12 பேர், தட்சிண கன்னடா, உத்தர கன்னடாவில் தலா 11 பேர், விஜயாப்புராவில் 9 பேர், மண்டியாவில் 8 பேர், பல்லாரி, தார்வாரில் தலா 6 பேர், உடுப்பியில் 3 பேர், தாவணகெரேயில் 2 பேர், துமகூரு, சித்ரதுர்கா, குடகுவில் தலா ஒருவர் உள்ளனர்.

கதக்கில் பாதிக்கப்பட்ட ஒருவர் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகத்தில் நேற்று கொரோனா அறிகுறிகளுடன் 203 பேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அந்த அறிகுறி உள்ளவர்களின் எண்ணிக்கை 720 ஆக அதிகரித்துள்ளது.”

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

முதல் இடத்தில் மைசூரு

கர்நாடகத்தில் நேற்று கொரோனா பாதித்த 19 பேரில் 10 பேர் மைசூருவை சேர்ந்தவர்கள். மாநிலத்தின் பிற பகுதிகளைவிட மைசூருவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் போக சிகிச்சை பெற்று வருபவர்களில் அதிக நோயாளிகளுடன் மைசூரு முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story