பெரம்பலூரில், ஊரடங்கு உத்தரவு மீறப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு பெரம்பலூரில் மீறப்படுகிறது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பெரம்பலூர்,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவை வருகிற மே 3-ந் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசுக்கு வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் பாதிக்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் வர, வர பெரம்பலூரில் ஊரடங்கு உத்தரவு மீறப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏற்கனவே அரசு அறிவித்த நேரத்துக்கு பிறகும், சாலையில் தேவையில்லாமல் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தும், வாகனங்களை பறிமுதல் செய்து, கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டாலும் தேவையில்லாமல் ஏராள மானவர்கள் சுற்றித்திரிகிறார்கள். அவ்வாறு இரு சக்கர வாகனங்களில் சுற்றத்திரிபவர்கள் முக கவசம், ஹெல்மெட் கூட அணிவது இல்லை. காரில் செல்பவர்கள் ‘சீட் பெல்ட்’ கூட அணிவதில்லை.
ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த போது பெரம்பலூர் மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. ஆனால் தற்போது பெரம்பலூர் நகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் அத்தியாவசியம் இல்லாத பொருட்கள் விற்பனை செய்யும் சில கடைகளின் உரிமையாளர்கள், பாதியளவு கதவுகளை திறந்து வைத்து வியாபாரம் செய்ய தொடங்கி விட்டனர். அதிகாரிகளும் கண்டும், கண்டு கொள்ளாதது போல் சென்று விடுகிறார்கள். இதனால் பெரம்பலூரில் வழக்கம்போல் பொதுமக்களின் நடமாட்டம் இருக்கிறது. சில மருந்தகங்கள், வங்கிகள், ரேஷன் கடைகளின் முன்பு சமூக இடைவெளியை பொதுமக்கள் பின்பற்றுவதே கிடையாது.
எனவே மாவட்ட நிர்வாகம் மற்ற மாவட்டங்களை போல் பெரம்பலூரில் அனுமதி சீட்டு வழங்கும் முறையினை அமல்படுத்தி, குடும்பத்திற்கு ஒருவரை மட்டும் வெளியே வர அனுமதிக்க வேண்டும். அத்தியாவசியம் இல்லாத பொருட் கள் விற்பனை செய்யும் கடைகளை பூட்டி ‘சீல்’ வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். முககவசம் அணியாமல் சுற்றித்திரிபவர்களுக்கு அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும். தேவையில்லாமல் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிபவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். ஒரு சில ரேஷன் கடைகள் முன்பு வெயிலுக்காக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நிறைய ரேஷன் கடைகளுக்கு முன்பு பந்தல் போடப்படாததால், வெயிலில் காத்து நின்று உணவு பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் வாங்கி செல்கின்றனர். அந்த ரேஷன் கடைகள் முன்பு சாமியானா பந்தல் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Related Tags :
Next Story