‘நாம் சோற்றில் கை வைக்க ஊரடங்கிலும் சேற்றில் கால் வைக்கும் விவசாயிகள்’
நாம் சோற்றில் கை வைக்க ஊரடங்கு உத்தரவு காலத்திலும் சேற்றில் கால் வைத்து நெல் நடவு பணியில் மும்முரமாக விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம்,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்த நேரத்தில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள், ஷாப்பிங் மால்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை பொருட்கள் விற்பதற்கு மட்டும் விலக்கு அளித்துள்ளது. இருப்பினும் காய்கறி, மளிகை கடைகள் மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என்று நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதுபோல் விவசாய பணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையையும் நீக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. விவசாய விளைபொருட்கள் கொள்முதல் நிறுவனங்கள், உரக்கடைகள், விவசாய எந்திரங்கள் வாடகை மையங்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி விவசாய விளைபொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களும் தடையின்றி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினால் மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள் தற்போது வழக்கம்போல் தங்களது விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் அச்சம் இருந்தாலும், அதையெல்லாம் தள்ளிவைத்து விட்டு விவசாயிகள் தங்களது பணியை செய்து வருகின்றனர். இந்த கொரோனா வைரஸ் மனித குலத்துக்கு எதிராக இருந்தாலும், அது நமக்கு மறைமுகமாக பல நன்மைகளையும் செய்துள்ளது. கொரோனா வைரசால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் விவசாயத்தையும், விளைபொருட்களின் முக்கியத்துவத்தையும் அனைவரையும் புரிந்து கொள்ள வைத்துள்ளது. பொதுவாக விவசாயத்தை பற்றி எல்லோரும் புகழ்ந்து பேசுவார்கள். ஆனால் அவர்களில் பலர் விவசாயிகளை பற்றி நினைக்காமல் விவசாய பொருட்களை உரிய விலை கொடுத்து வாங்க தயக்கம் காட்டுவார்கள்.
அதே சமயத்தில் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய உணவு பொருட்களை அதிக விலை கொடுத்து கடைகளில் வாங்கி சாப்பிடுவார்கள். இதை எல்லாம் அறிந்தும் எந்த சலனமும் இன்றி விவசாயிகள் தங்களது பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது கூட கொரோனா வைரஸ் அச்சம் இருந்தாலும், அதையெல்லாம் தள்ளிவைத்து விட்டு நாம் சோற்றில் கை வைப்பதற்காக விவசாயிகள் சேற்றில் கால் வைத்து விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் விழுப்புரம் அருகே உள்ள கப்பூர், பெரும்பாக்கம், தோகைப்பாடி, கோலியனூர், தொடர்ந்தனூர், சாலைஅகரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் நெல் நடவு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story