இன்று முதல் நடக்கிறது, கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் - கலெக்டர் தகவல்


இன்று முதல் நடக்கிறது, கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 15 April 2020 10:15 PM GMT (Updated: 16 April 2020 4:29 AM GMT)

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 16 பேரும் வசித்த தெருவில் உள்ளவர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது என்று வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாதிக்பாஷா (வயது 46) சிகிச்சை பலனின்றி கடந்த 8-ந் தேதி உயிரிழந்தார். தற்போது கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட கொணவட்டத்தை சேர்ந்த 52 வயது பெண்ணும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். நேற்று முன்தினம் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த பெண்ணிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சாதிக்பாஷா மற்றும் கொணவட்டத்தை சேர்ந்த பெண்ணிற்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனைகளில் நோய் தொற்று குறித்து விசாரிக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் விசாரணைக்கு வரும்போது அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் அந்த மருத்துவமனை மூடப்பட்டு வழக்கு தொடரப்படும்.

பொதுமக்கள் சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி போன்றவை இருந்தால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு செல்லாமல் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். தனியார் மருத்துவமனைக்கு இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறியுடன் வருபவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்க வேண்டும். சாதிக்பாஷா மற்றும் கொணவட்டத்தை சேர்ந்த பெண்ணிற்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், அவர்களுடன் மருத்துவமனையில் இருந்த பிற நோயாளிகள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில் சோதனை செய்து கொள்ள வேண்டும்.

வேலூர் ஆர்.என்.பாளையம், முள்ளிப்பாளையம், கஸ்பா, சைதாப்பேட்டை, கொணவட்டம், சின்னஅல்லாபுரம், கருகம்புத்தூர் ஆகிய பகுதிகளில் வசித்த 16 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 16 பேரும் வசித்த தெருவில் உள்ளவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.

அதன்படி கொணவட்டம், முள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர்களுக்கு கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், கஸ்பா பகுதியை சேர்ந்தவர்களுக்கு கஸ்பா மாநகராட்சி தொடக்கப்பள்ளியிலும், சின்னஅல்லாபுரத்தை சேர்ந்தவர்களுக்கு சின்னஅல்லாபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், ஆர்.என்.பாளையத்தை சேர்ந்தவர்களுக்கு ஆர்.என்.பாளையம் முஸ்லிம் உயர்நிலைப்பள்ளியிலும், சைதாப்பேட்டையை சேர்ந்தவர்களுக்கு கோடையிடி குப்புசாமி முதலியார் பள்ளியிலும், கருகம்பத்தூரை (ஹாஜிபுரா) சேர்ந்தவர்களுக்கு ஹாஜிபுரா முஸ்லிம் தொடக்கப்பள்ளியிலும் இன்று(வியாழக்கிழமை) முதல் வருகிற 30-ந் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும்.

இந்த முகாம்களில் சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறி காணப்படும் பொதுமக்களும் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம். இந்த பரிசோதனையில் மாவட்ட நிர்வாகத்துக்கு அந்தந்த பகுதி ஜமாத்தாரர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறி உள்ளார்.

Next Story