குமரி மாவட்டத்தில், கொரோனா தொற்றை அகற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் - கண்காணிப்பு அதிகாரி தகவல்
குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை அகற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கண்காணிப்பு அதிகாரி கூறினார்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார்.
இதில் குமரி மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பாளரும், தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல்துறை இயக்குனர் கருணாகரன், போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் கண்காணிப்பு அதிகாரி கருணாகரன் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் இதுவரை 16 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. கலெக்டர் தலைமையில் அனைத்து அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, நோய் பரவுவதை தடுத்து உள்ளனர். ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு நிவாரண தொகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் 98 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நோயை முழுமையாக நீக்க பொது மக்கள் ஊரடங்கு காலத்தில் தங்களது வீடுகளில் தனித்து இருந்தும், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வீட்டை விட்டு வெளியே வரும்போது, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கொரோனா தொற்று நோய் நமது மாவட்டத்தில் இருந்து முற்றிலுமாக அகற்றுவதற்கும், பரவாமல் தடுப்பதற்கும் அனைவரும் மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆலோசனை கூட்டத்தில் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவின்குமார் அபினபு, மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, பத்மநாபபுரம் உதவி கலெக்டர் சரண்யா அரி, நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதன்பிறகு கண்காணிப்பு அதிகாரி கருணாகரன், போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்குமார் ஆகியோர் நாகர்கோவிலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, தற்போது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளான டென்னிசன் ரோடு, வெள்ளாடிச்சிவிளை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story