கிருஷ்ணகிரி, ஓசூரில் கொரோனா ரத்த மாதிரி பரிசோதனை மையம் விரைவில் செயல்படும் - கலெக்டர் பிரபாகர் தகவல்


கிருஷ்ணகிரி, ஓசூரில் கொரோனா ரத்த மாதிரி பரிசோதனை மையம் விரைவில் செயல்படும் - கலெக்டர் பிரபாகர் தகவல்
x
தினத்தந்தி 16 April 2020 4:44 AM GMT (Updated: 16 April 2020 4:44 AM GMT)

கிருஷ்ணகிரி, ஓசூரில் கொரோனா ரத்த மாதிரி பரிசோதனை மையம் விரைவில் செயல்படும் என்று ஓசூரில் கலெக்டர் பிரபாகர் தெரிவித்தார்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட கொரோனா தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டை கலெக்டர் பிரபாகர் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஓசூர் காவேரி் மருத்துவமனை இயக்குனர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட டாக்டர்கள் உடன் இருந்தனர். பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஓசூர் தொழிற்சங்க கூட்டமைப்பினரின் ரூ.1½ கோடி நிதியில், ஓசூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் வெண்டிலேட்டர், ஐ.சி.யூ. உள்ளிட்ட வசதிகளும், உபகரணங்களும் பெறப்பட்டு 50 படுக்கை வசதிகளுடன் கூடிய தனி வார்டு தயார் நிலையில் உள்ளது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மற்றும் ஓசூர் வெக்டார் கண்ட்ரோல் இன்ஸ்டிடியூட் ஆகிய 2 இடங்களில் கொரோனா ரத்த மாதிரிகள் பரிசோதனை மையம் இன்னும் 2 நாட்களில் செயல்பட உள்ளது.

இனி, மாவட்டத்தில் சந்தேகிக்கக்கூடிய நபர்களின் ரத்த மாதிரிகளை இங்கேயே பரிசோதித்து கொள்ள முடியும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் உள்ளிட்ட எந்த பகுதியிலும் இதுவரை யாருக்கும் கொரோனா அறிகுறி ஏற்படவில்லை. இந்த மாவட்டத்தில், 410 பேரின் ரத்த மாதிரிகள் அரசு மருத்துவக்கல்லூரியில் ஆய்வுக்குட்படுத்தியதில் 265 பேருக்கு கொரோனா அறிகுறி இல்லை என்று தெரியவந்துள்ளது. மீதமுள்ள 145 பேரின் ரத்த மாதிரி முடிவுகள் விரைவில் தெரிய வரும். எனவே பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து கிருஷ்ணகிரி மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக விளங்கும் வகையில் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Next Story