புதுவைக்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் - ரங்கசாமி வலியுறுத்தல்


புதுவைக்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் - ரங்கசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 16 April 2020 1:55 PM IST (Updated: 16 April 2020 1:55 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா நிவாரண பணிகளுக்காக புதுவைக்கு மத்திய அரசு நிதி வழங்கவேண்டும் என்று என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வலியுறுத்தி உள்ளார்.

புதுச்சேரி, 

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி மாநிலத்தில் இலவச அரிசி வினியோகம் முறையாக நடைபெறவில்லை. இதுதொடர்பாக ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள், துணை சபாநாயகரே புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி வித்தியாசமின்றி அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே சமயத்தில் அனைத்து பொருட்களையும் ரேஷன் கடைகளில் பல மாதங்களாக ஊதியமின்றி வேலை செய்யும் ஊழியர்கள் மூலம் வினியோகம் செய்ய வேண்டும். அவர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும்.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு குறிப்பாக கட்டிட தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள் வேலைவாய்ப்பு இல்லாததால் தனியாக ரூ.2 ஆயிரம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். அதேபோல் ஜவுளிக்கடையில் வேலை செய்த பெண்கள், தொழிலாளர்கள், முடி திருத்துவோர், சுமை தூக்கும் தொழிலாளி, கூலித்தொழிலாளர்கள் ஆகியோருக்கும் நிவாரண உதவி வழங்கவேண்டும். மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் நிவாரணத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

புதுவை மாநிலத்தில் அரசு ஊழியர்கள், மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் பெரும்பாலும் மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. நிதி நெருக்கடியில் இருப்பதால், புதுவைக்கு தேவையான நிதியை பிரதமர் மோடி வழங்க வேண்டும். என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் அனைத்து தொகுதிகளிலும் பொறுப்பாளர்கள் மூலமாக மக்களுக்கு உணவு, முக கவசம், கிருமி நாசினி, மளிகை பொருட்கள் ஆகியவை வழங்கப்படுகிறது. மத்திய அரசு அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால் முக கவசத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே மருந்து கடைகளில் முக கவசம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story