கொரோனா அச்சமின்றி ஊரடங்கில் வலம் வரும் வாகன ஓட்டிகள் - சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு
கொரோனா அச்சமின்றி ஊரடங்கில் வாகன ஓட்டிகள் வலம் வருகிறார்கள். சாலையில் எங்கு பார்த்தாலும் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
தஞ்சாவூர்,
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து உள்ளது. அத்தியாவசிய தேவைக்காக காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க வருபவர்கள் தவிர மற்றவர்களை போலீசார் விரட்டி விடுகின்றனர். அதையும் மீறி தேவையில்லாமல் வாகனங்களில் வருபவர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்களது வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் அதையும் மீறி வாகனங்களில் வலம் வருவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றன. தஞ்சை மாநகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் நேற்று காலை முதல் கார், இருசக்கர வாகனங்களின் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக கீழராஜவீதி, காந்திஜிசாலை, மருத்துவக்கல்லூரி சாலை, தெற்கு வீதி, மேலவீதி உள்ளிட்ட பல்வேறு சாலைகளிலும் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. வாகனங்களை வழிமறித்து கேட்டால் மருந்து வாங்க செல்வதாக கூறுகிறார்கள்.
கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும் மக்கள் அச்சமின்றி வாகனங்களில் வலம் வருகின்றனர். போலீசாரும் வழக்கம் போல் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய தேவை இன்றி வெளியில் திரிந்தவர்களை கைது செய்தாலும், மக்கள் பயமின்றி வெளியில் உலா வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
Related Tags :
Next Story