ஸ்ரீவைகுண்டம் அருகே, மினிலாரி மோதி விவசாயி பலி - பெண் படுகாயம்


ஸ்ரீவைகுண்டம் அருகே, மினிலாரி மோதி விவசாயி பலி - பெண் படுகாயம்
x
தினத்தந்தி 16 April 2020 10:30 PM GMT (Updated: 16 April 2020 7:07 PM GMT)

ஸ்ரீவைகுண்டம் அருகே மினிலாரி மோதி விவசாயி பலியானார். மேலும் உறவுக்கார பெண் படுகாயம் அடைந்தார்.

ஸ்ரீவைகுண்டம், 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி (வயது 45). விவசாயி. அதே ஊரில் வன்னியராஜா கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் மனைவி ராசாத்தி (34). உறவினர்களான இவர்கள் 2 பேரும் அப்பகுதியில் சாலையோரம் வெள்ளரிக்காய் வியாபாரம் செய்து வந்தனர்.

நேற்று காலையில் மாடசாமி, ராசாத்தி ஆகிய 2 பேரும் வெள்ளரிக்காய்களை மொத்தமாக வாங்குவதற்காக, அங்குள்ள தோட்டத்துக்கு நடந்து சென்றனர். கருங்குளம் சுடலைமாட சுவாமி கோவில் அருகில் சாலையோர வளைவில் நடந்து சென்றபோது, திருச்சியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு சொந்தமான மினிலாரி எதிர்பாராதவிதமாக மாடசாமி, ராசாத்தி ஆகிய 2 பேர் மீதும் பயங்கரமாக மோதியது.

இதில் நிலைதடுமாறிய மினிலாரி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த மாடசாமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ராசாத்தி உயிருக்கு போராடியவாறு கிடந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, படுகாயம் அடைந்த ராசாத்தியை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இறந்த மாடசாமியின் உடலை செய்துங்கநல்லூர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மினிலாரி டிரைவரான திருச்சி அருகே மணச்சநல்லூரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் யுவராஜை (21) கைது செய்தனர். விபத்தில் இறந்த மாடசாமிக்கு லட்சுமி என்ற மனைவியும், மணிகண்டன் என்ற மகனும், மகராசி என்ற மகளும் உள்ளனர்.

Next Story