ஊரடங்கு உத்தரவு: தொழிலாளர்கள் வேலைக்கு வராததால் மரத்திலேயே பழுத்த வாழைத்தார்கள் - பூசணிக்காய்களும் குவிந்து கிடக்கின்றன


ஊரடங்கு உத்தரவு: தொழிலாளர்கள் வேலைக்கு வராததால் மரத்திலேயே பழுத்த வாழைத்தார்கள் - பூசணிக்காய்களும் குவிந்து கிடக்கின்றன
x
தினத்தந்தி 17 April 2020 3:45 AM IST (Updated: 17 April 2020 12:37 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு உத்தரவு காரணமாக தொழிலாளர்கள் வேலைக்கு வராததால் மரத்திலேயே வாழைத்தார்கள் பழுத்துவிட்டன. காவல்கிணறு மார்க்கெட்டில் பூசணிக்காய்கள் ஏலம் போகாமல் குவிந்து கிடக்கின்றன.

நெல்லை, 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு கடந்த 24-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தினந்தோறும் கிடைக்க நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நடமாடும் காய்கறி வாகனங்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று வருகிறது.

தொழிலாளிகள் வேலைக்கு வர முடியாததால், பல இடங்களில் விளை பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. மேலும் லாரி, மினி ஆட்டோ போன்ற வாகனங்கள் இயக்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வெளியே கொண்டு செல்ல முடியவில்லை. பல பயிர்கள் சேதமடைந்துள்ளன.

நெல்லையை அடுத்து முன்னீர்பள்ளத்தை சேர்ந்த விவசாயி பூல்பாண்டி என்பவருக்கு அந்த பகுதியில் 5 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் வாழை பயிரிட்டுள்ளார். வாழைத்தார்கள் விளைந்த நிலையில் உள்ளது. அதை அவரால் இறக்கி விற்பனை செய்ய முடியவில்லை.

5 ஆயிரம் வாழைகள்

இதுகுறித்து விவசாயி பூல்பாண்டி கூறும் போது, எனது நிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 ஆயிரம் வாழைக்கன்றுகள் பயிரிடுவேன். அதை நாகர்கோவில், நெல்லை டவுன் நயினார்குளம் மாாக்கெட்டுக்கு சென்று விற்பனை செய்து வருவேன். இந்த ஆண்டும் வழக்கம் போல் 5 ஆயிரம் வாழைகள் பயிரிட்டுள்ளேன்.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. இதனால் தொழிலாளிகள் வேலைக்கு வர மறுக்கிறார்கள். வாழைத்தார்களை கொண்டு செல்ல லோடு ஆட்டோக்களும் வர முன்வரவில்லை. இதனால் எனது தோட்டத்தில் போடப்பட்டு இருந்த வாழைகள் பழுத்து விட்டன. காக்கா, குருவிகள் கொத்தி வாழைத்தாரை வீணாக்குகிறது. சரியான நேரத்தில் வாழைத்தார்களை இறக்கி சந்தைக்கு கொண்டு செல்ல முடியவில்லை என்றார்.

சேரன்மாதேவி

சேரன்மாதேவி அருகே வீரவநல்லூர் பகுதியில் வழக்கமாக 50 ஏக்கரில் வாழை விவசாயம் செய்வார்கள். இந்த ஆண்டும் அதே போல பல ஏக்கரில் வாழை விவசாயம் செய்துள்ளனர். தற்போதுள்ள ஊரடங்கால் விற்பனைக்காக வாழைப்பழம் மற்றும் இலைகள் எடுத்து செல்வதில் சிரமம் உள்ளதால் வாழைப்பழம் குலை தள்ளிய நிலையில் மரத்திலேயே பழுத்து வீணாகிறது. அதே நேரத்தில் சிரமப்பட்டு சந்தைகளுக்கு அனுப்பினாலும் போதிய விலை கிடைப்பதில்லை என்பதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கடும் சிரமப்பட்டு வெளியூர்களுக்கு வாழைத்தார்கள் அனுப்பினாலும் எங்களுக்கு போதிய விலை கிடைப்பதில்லை. ரூ.350 முதல் 400-க்கு விற்ற பழத்தார்கள் தற்போது 100 ரூபாய்க்கு மட்டுமே கேட்கப்படுகிறது. இதனால் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளோம். தற்போது செய்வது அறியாமல் இருக்கின்றோம். வாழை விவசாயிகளுக்கு தமிழக அரசு உதவ வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பூசணிக்காய்கள் தேக்கம்

காவல்கிணறு காமராஜர் காய்கனி மார்கெட்டில் 144 தடை உத்தரவையடுத்து காய்கறி ஏலம் விற்பனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நேரத்திற்குள் காய்கறிகள் வாங்க வியாபாரிகள் வர தாமதமானால் காய்கறிகள் ஏலம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பூசணி காய்கள், தக்காளி ஏலம் போகாமல் மார்கெட்டில் தேக்கம் அடைந்துள்ளது. பூசணிக்காய் ஒரு கிலோ ரூ.2 க்கும், தக்காளி கிலோ ரூ.4- க்கும் ஏலம் கேட்க வியாபாரிகள் வராததால் தேக்கம் அடைந்துள்ளது. மார்கெட்டிற்கு விவசாயிகள் வாகனங்களில் காய்கறிகள் கொண்டு வருவதற்கும், வியாபாரிகள் காய்கறிளை வாங்குவதற்கும் மாவட்ட கலெக்டர் அதிக நேரம் ஒதுக்க வேண்டும் என்று மார்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் செல்வகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story