சமூக இடைவெளி கடைபிடிக்காத மீனவர்கள் - பாம்பன் போலீசில் புகார்


சமூக இடைவெளி கடைபிடிக்காத மீனவர்கள் - பாம்பன் போலீசில் புகார்
x
தினத்தந்தி 17 April 2020 3:15 AM IST (Updated: 17 April 2020 3:11 AM IST)
t-max-icont-min-icon

பாம்பன் கடற்கரையில் சமூக இடைவெளி கடைபிடிக்காத மீனவர்களை காவல்துறையினர் எச்சரித்தனர்.

ராமேசுவரம்,

மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கட்டுப்பாடு மற்றும் நிபந்தனைகளை கடைபிடித்து மீன் பிடித்து வர நாட்டுப்படகுகளுக்கு மட்டும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் பாம்பன் கடற்கரையில் நாட்டுப்படகுகளில் மீன் பிடிக்க சென்று வந்த மீனவர்கள் ஏராளமானோர் கூட்டமாக நின்று மீன்களை இறக்கி தரம் பிரிப்பதாக வருவாய்துறை மற்றும் மீன்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. 

அதைத் தொடர்ந்து ராமேசுவரம் தாசில்தார் அப்துல்ஜபார், மீன் துறை உதவி இயக்குனர் யுவராஜ், பாம்பன் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் ராஜா மற்றும் போலீசார் வடக்கு கடற்கரை பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது கடற்கரையில் ஏராளமான மீனவர்கள் கூட்டமாக நின்றபடி வலைகளில் இருந்து மீன்களை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். உடனே அதிகாரிகள் அவர்களை எச்சரித்தனர். 

இதைத் தொடர்ந்து கடற்கரையில் கூட்டமாக நின்ற மீனவர்கள் அனைவரும் வேகமாக அங்கிருந்து கலைந்து சென்றதுடன் அருகருகே நிறுத்தப்பட்ட மீன் பிடி படகுகளையும் கடலில் சமூக இடை வெளிவிட்டு நங்கூரமிட்டு நிறுத்தி படகில் இருந்த படியே மீன்களை தரம் பிரித்து வலைகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். 

இது குறித்து பாம்பன் மீன் துறை ஆய்வாளர் ரமேஷ்பாபு போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று கொடுத்துள்ளார். அதில், விதிமுறைகளை மீறிய பாம்பனை சேர்ந்த 12 நாட்டுப் படகுகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, கடற்கரையில் கூட்டமாக நின்று மீன்களை இறக்கி சமூக இடை வெளியை பின்பற்றாத மீனவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது.

Next Story