பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் வரத்து முற்றிலுமாக நின்றது


பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் வரத்து முற்றிலுமாக நின்றது
x
தினத்தந்தி 17 April 2020 3:45 AM IST (Updated: 17 April 2020 3:36 AM IST)
t-max-icont-min-icon

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு நீர்வரத்து முற்றிலுமாக நின்றுவிட்டது.

ஊத்துக்கோட்டை,

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி அந்திர மாநில அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி. தண்ணீரும், ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை 8 டி.எம்.சி. தண்ணீரையும் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும்.

கடந்த ஆண்டு கண்டலேறு அணை முழுவதுமாக வற்றி விட்டதால் ஜூலை மாதத்தில் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கவில்லை. ஆகஸ்டு மாத இறுதியில் ஆந்திராவில் பலத்த மழை பெய்ததால் கண்டலேறு அணைக்கு போதிய தண்ணீர் வந்து சேர்ந்தது.

இதனால் கடந்த செப்டம்பர் மாதம் 25-ந்தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 28-ந்தேதி பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது. கண்டலேறு அணையில் அதிகபட்சமாக வினாடிக்கு 2,300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீர் பூண்டி ஏரிக்கு அதிகபட்சமாக வினாடிக்கு 810 கனஅடி தண்ணீர் வந்து சேர்ந்தது.

இந்தநிலையில் கண்டலேறு அணையில் தண்ணீர் மட்டம் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு கடந்த வாரம் நிறுத்தப்பட்டது. இதனால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நிதிநீர் வரத்து வெகுவாக குறைந்தது. நேற்று முன்தினம் இரவு தண்ணீர் வரத்து முற்றிலுமாக நின்றுவிட்டது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3,231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 26.84 அடியாக பதிவானது. 1,117 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 260 கனஅடி தண்ணீரும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 10 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி செப்டம்பர் 28 முதல் நேற்று முன்தினம் இரவு வரை 7.556 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்துள்ளது.

Next Story