அடுத்த மாதம் 4-ந் தேதிக்குள் வெளிமாநில தொழிலாளர் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் - மாவட்ட நிர்வாகங்களுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


அடுத்த மாதம் 4-ந் தேதிக்குள் வெளிமாநில தொழிலாளர் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் - மாவட்ட நிர்வாகங்களுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 17 April 2020 4:45 AM IST (Updated: 17 April 2020 4:45 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் தங்கியிருக்கும் வெளிமாநில தொழிலாளர்களின் புள்ளி விவரங்களை சேகரித்து மே 4-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களுக்கு மும்பை ஐகோர்ட்டின் அவுரங்காபாத் கிளை உத்தரவிட்டு உள்ளது.

மும்பை, 

கொரோனா ஊரடங்கு மே 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில், மராட்டியத்தின் பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலிகளின் தற்போதைய நிலைமை மற்றும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள், பிற மருத்துவ பணியாளர்கள் சந்தித்து வரும் சிரமங்கள் தொடர்பாக பொதுநலன் மனுவை மும்பை ஐகோர்ட்டின் அவுரங்காபாத் கிளை தாமாக முன் வந்து விசாரணை நடத்தியது.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.வி. குகே பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:-

மே 4-ந் தேதிக்குள்...

மாவட்ட நிர்வாகங்கள் தங்கள் மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து வெளிமாநில தொழிலாளர்கள் பற்றிய புள்ளி விவரங்களை சேகரிக்க வேண்டும். தங்கள் வீடுகளுக்கு திரும்பி செல்ல முடியாத நிலையில் இருக்கும் அத்தகையவர்களை கவனித்துக் கொள்ள தங்குமிடம் உள்ளதா, வெளிமாநில தொழிலாளர்கள் விபரீத முடிவு எதையும் எடுத்து விடாமல் இருப்பதற்காக உளவியல் ஆலோசனை வழங்க மாவட்ட நிர்வாகங்களால் முயற்சிகள் எடுக்கப்பட்டு உள்ளதா, அவர்கள் எந்தவொரு விபரீத நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்தவும், அல்லது உளவியல் பிரச்சினையால் பாதிக்கப்படவில்லை என்பதை கோர்ட்டுக்கு தெரிவிக்கவும் வேண்டும்.

2 வாரங்களுக்குள் இந்த புள்ளி விவரங்களை தயாரித்து மே 4-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். கொரோனா வைரசுக்கு எதிரான போரில் களத்தில் இருக்கும் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்புக்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

Next Story