ஊரடங்கு உத்தரவை மீறி நண்பர்களுடன் சேர்ந்து கறி விருந்து சாப்பிட்டு முகநூலில் வெளியிட்ட வாலிபர் கைது


ஊரடங்கு உத்தரவை மீறி நண்பர்களுடன் சேர்ந்து கறி விருந்து சாப்பிட்டு முகநூலில் வெளியிட்ட வாலிபர் கைது
x
தினத்தந்தி 17 April 2020 3:30 AM IST (Updated: 17 April 2020 8:37 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு உத்தரவை மீறி நண்பர்களுடன் சேர்ந்து கறி விருந்து சாப்பிட்டு முகநூலில் வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கபிஸ்தலம், 

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள தியாகசமுத்திரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சின்னகுஞ்சு மகன் சிவகுரு(வயது 29). இவர், திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து இவர் திருப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார்.

சொந்த ஊருக்கு வந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் சிவகுரு தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு தியாகசமுத்திரம் அய்யர் வயல் எனும் திடலுக்கு சென்று உள்ளார். அங்கு ஆடு வெட்டி கறி சமைத்து அனைவரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டுள்ளனர்.

ஊரடங்கு அமலில் இருப்பதால் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு பிறப்பித்துள்ள உத்தரவையும் மீறி 50-க்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூறி கறி விருந்து சாப்பிட்டு உள்ளனர். அத்துடன் இவர்கள் அனைவரும் சேர்ந்து சாப்பிடும் காட்சியை முகநூலிலும் வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில், தியாகசமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் திவ்யா தேவி புகார் அளித்தார். அதன்பேரில் பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால், கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகுருவை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் மேலும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story