பெண் ஒருவர் இறந்ததால் முன்னெச்சரிக்கையாக திருக்கடையூரில் கடைகள் அடைப்பு
பெண் ஒருவர் இறந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருக்கடையூரில் கடைகள் அடைக்கப்பட்டன.
திருக்கடையூர்,
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி நாகை மாவட்டம், திருக்கடையூர் கடைத்தெருவில் உள்ள அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளான மளிகை கடை, பால் கடை, காய்கறி கடை, இறைச்சி கடை உள்ளிட்டவைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் நேற்று திருக்கடையூர் பகுதியில் ஒரு பெண் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். அவருக்கு கொரோனா வைரஸ் இருக்குமோ? என்ற அச்சத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பெண்ணின் ரத்த பரிசோதனை வரும் வரை அனைத்து கடைகளையும் தொடர்ந்து அடைக்க வேண்டும் என நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து நேற்று காலை 11 மணியில் இருந்து திருக்கடையூர் ஊராட்சியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மேலும், உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து போன பெண் வசித்த பகுதி மற்றும் சுற்று பகுதி அடைக்கப்பட்டு, ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் திருக்கடையூர் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story