சேலத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரிகள் ஆய்வு


சேலத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளில்  சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 17 April 2020 4:00 AM IST (Updated: 17 April 2020 10:54 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சேலம், 

சேலம் மண்டலத்தில் கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிப்பதற்காக டாஸ்மாக் இயக்குனர் கிர்லோஸ்குமார், போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.யும், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய தலைவருமான மஞ்சுநாதா ஆகியோர் சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், கொரோனா வைரஸ் நோய் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்ட நபர்கள் தங்கியிருந்த பகுதிகளான சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சீனிவாசா நகர் மற்றும் களரம்பட்டி ஆகிய தடை செய்யப்பட்ட பகுதிகளில் நேற்று சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது அவர்கள், கொரோனா தொற்று நபர்களின் வீடுகளுக்கு அருகில் 5 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

இதைத்தொடர்ந்து சேலம் செவ்வாய்பேட்டை, பால் மார்க்கெட் மற்றும் லீபஜார் பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்கி செல்கிறார்களா? என்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் களரம்பட்டி மற்றும் ஜாகீர்அம்மாபாளையம், அவ்வை நகர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்த வெளி மாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள பகுதிகளையும் சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதனிடையே, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ராமன் முன்னிலையில் நடந்த இக்கூட்டத்தில், சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரிகள் கிர்லோஸ்குமார், மஞ்சுநாதா ஆகியோர் கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை கூறினர்.

அப்போது அவர்கள், பல்வேறு குழுக்கள் மூலம் வீடுதோறும் நேரில் சென்று காய்ச்சல், சளி, இருமல், மூச்சு திணறல் இருக்கின்றதா? என்பது குறித்து ஆய்வு செய்யும் பணிகளை தொடர்ந்து அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டனர்.

இக்கூட்டத்தில் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர், மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story