பெண்ணிடம் ஆபாசமாக பேசியதாக ஐ.ஆர்.பி.என். போலீஸ் அதிகாரி கைது
பெண்ணிடம் ஆபாசமாக பேசியதாக ஐ.ஆர்.பி.என். போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.
திருபுவனை,
புதுவை மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் இணைந்து ஐ.ஆர்.பி.என். போலீசார், ஊர்க்காவல் படையினர், மகளிர் போலீசார் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களை கண்காணிக்கும் வகையில் போலீஸ் சூப்பிரண்டுகள், ஐ.ஆர்.பி.என். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அதன்படி திருபுவனை, மதகடிப்பட்டு, திருவண்டார்கோவில் பகுதியில் ஐ.ஆர்.பி.என். துணை கமாண்டன்ட் சுபாஷ் (வயது 39) கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் திருபுவனை போலீஸ் நிலையத்துக்கு சென்ற அவர் அங்கு பணியில் இருந்த ஊர்க்காவல் படையை சேர்ந்த பெண் ஒருவரிடம் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவாவிடம் முறையிட்டார். அவரது உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கணேசன் இதுகுறித்து விசாரணை நடத்தினார். இதில் பெண்ணிடம் துணை கமாண்டன்ட் சுபாஷ், ஆபாசமாக நடந்துகொண்டது தெரியவந்தது.
இதையடுத்து பெண்ணிடம் ஆபாசமாக பேசுதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுபாசை போலீசார் கைது செய்தனர்.
ஊர்க்காவல் படையை சேர்ந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசியதாக ஐ.ஆர்.பி.என். துணை கமாண்டன்ட் ஒருவரே கைது செய்யப்பட்டு இருப்பது புதுவை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story