திருப்பூர் பெண் போலீசாருக்கு கொரோனா விழிப்புணர்வு கோலப்போட்டி - உதவி கமிஷனர் பரிசுகள் வழங்கி பாராட்டு
திருப்பூர் மாநகர வடக்கு போலீஸ் சரகம் சார்பில் பெண் போலீசாருக்கான கொரோனா விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெற்றது.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் மாநகர வடக்கு போலீஸ் சரகம் சார்பில் பெண் போலீசாருக்கான கொரோனா விழிப்புணர்வு கோலப்போட்டி அவினாசி ரோடு அனுப்பர்பாளையம்புதூர் சந்திப்பில் நேற்று மாலை நடத்தப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பெண் போலீசார் கலந்து கொண்டு கோலங்களை போட்டனர்.
சமூக இடைவெளியை கடைபிடித்தல், வீட்டில் தனித்திருத்தல், கொரோனாவுக்கு எதிராக போராடுதல் உள்பட ஏராளமான விழிப்புணர்வு கோலங்கள் இடம் பெற்றிருந்தது.
இதில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை வலியுறுத்தி கொரோனா படத்துடன் வடக்கு போலீசார் போட்ட பெரிய கோலம் முதலிடமும், கொரோனா தடுப்பு பணியில் மருத்துவம், சுகாதாரம், காவல்துறையினரின் சேவைகளை படங்களுடன் கோலமிட்ட திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் 2-ம் இடமும், கொரோனாவை வெல்ல விழித்திரு, வீட்டில் இரு, தனித்திரு என்ற கருப்பொருளுடன் கூடிய அனுப்பர்பாளையம் போலீசாரின் கோலம் 3-ம் இடமும் பிடித்தது.
போட்டிகளில் வெற்றி பெற்ற பெண் போலீசாருக்கு திருப்பூர் மாநகர வடக்கு போலீஸ் உதவி கமிஷனர் வெற்றிவேந்தன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். கோலப்போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பெண் போலீசாருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
இதில் இன்ஸ்பெக்டர்கள் ராஜன், கணேசன், முருகையன், முனியம்மாள், அனுராதா உள்பட போலீசார் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story