உயர்மட்ட குழு பரிந்துரை இல்லை: விதிமுறையை பின்பற்றாமல் பட்டாசு ஆலை செயல்பட்டால் நடவடிக்கை - கலெக்டர் தகவல்
பட்டாசு ஆலை இயங்க உயர்மட்ட குழு பரிந்துரைக்க வில்லை எனவும் விதிமுறையை பின்பற்றாமல் ஆலை செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் கண்ணன் கூறினார்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் வருகிற 20-ந் தேதி முதல் கிராமப்பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள் செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி இந்த ஆலைகள் செயல்பட வேண்டுமென தெரிவித்துள்ள மாவட்ட நிர்வாகம், மாவட்டத்தில் 954 பட்டாசு ஆலைகள் கிராமப்புறங்களில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு வருகிற 20-ந் தேதி முதல் எந்தெந்த தொழில் நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கலாமென ஆய்வு செய்து பரிந்துரை செய்ய நிதிதுறை செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் உயர் மட்ட குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவின் தலைவர் கிருஷ்ணனை தொடர்பு கொண்டு விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் செயல்பட பரிந்துரை ஏதும் செய்யப்பட்டுள்ளதா என கேட்டபோது அவர் குழு இதுதொடர்பாக பரிந்துரை செய்யவில்லை என்று தெரிவித்தார். மேலும் மாவட்ட நிர்வாகம் அரசு அறிவுறுத்தலின்பேரில் அனுமதி வழங்கி இருக்கலாம் என்று தெரிவித்ததுடன் இதுபற்றி மாவட்ட நிர்வாகத்துடன் பேசுவதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து கலெக்டர் கண்ணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கிராமப்புறங்களில் உள்ள தொழில் நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிப்பதற்கு ஒரு செயல்திட்டத்தை அரசு தந்துள்ளது. இந்த செயல்திட்டத்தில் உள்ளபடிதான் கிராமப்புறங்களில் உள்ள தொழில் நிறுவனங்கள் செயல்பட முடியும் என்றும் தெரிவித்துள்ளது. அதன்படி 50 சதவீத தொழிலாளர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தொழில் நிறுவனம் செயல்பட வேண்டும். தொழில் நிறுவனம் செயல்படுவதற்கு முன்பு தொழில் நிறுவன வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட வேண்டும்.
தொழிலாளர்கள் முக கவசம் அணிந்துதான் வேலைபார்க்க வேண்டும். 6 அடி இடைவெளி விட்டு ஒவ்வொரு தொழிலாளரும் வேலைபார்ப்பதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
அந்த வகையில்தான் இந்த மாவட்டத்தில் கிராமப்பகுதியில் செயல்படும் 954 பட்டாசு ஆலைகள் 20-ந் தேதி முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்திடம் பதிவு செய்துள்ள பட்டாசு ஆலைகளுக்குத்தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதர பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி இல்லை.
இந்த பட்டாசு ஆலைகள் செயல்படுவதற்கு முன்பு பட்டாசு ஆலைகள் இடம்பெற்றுள்ள தாலுகா அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்து விட்டு அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே செயல்பட தொடங்க வேண்டும். 50 சதவீத தொழிலாளர்களுடன் பட்டாசு தயாரிப்பதற்கு வாய்ப்பு இல்லையென உற்பத்தியாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விதிமுறைப்படி 50 சதவீத தொழிலாளர்களைத்தான் பணியமர்த்த வேண்டும். அவர்களை கொண்டு பட்டாசு தயாரிக்க வாய்ப்பு இல்லையென்றால் ஆலை செயல்படுவது குறித்து ஆலை உரிமையாளர்கள்தான் முடிவு செய்துகொள்ள வேண்டும். கூடுதல் பணியாளர்களை பணியமர்த்த வாய்ப்பு இல்லை.
பட்டாசு தயாரிப்பு மூலப்பொருட்கள் வினியோகிக்கும் நிறுவனங்கள் நகர்ப்பகுதியில் உள்ளதால் அந்த நிறுவனங்கள் செயல்படவும் அனுமதி தர வேண்டுமென உற்பத்தியாளர்கள் தரப்பில் கேட்கப்பட்டது. நகர்ப்பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர பிற நிறுவனங்களுக்கு செயல்பட அனுமதி இல்லை என்ற காரணத்தால் பட்டாசு தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் வினியோகிக்கும் கடைகள் செயல்பட அனுமதிக்க இயலாது.
பட்டாசு ஆலைகள் விதிமுறைப்படி செயல்படுகிறதா என்பது அதிகாரிகளால் தீவிரமாக கண்காணிக்கப்படும். விதிமுறைகளை பின்பற்றாமல் பட்டாசு ஆலை செயல்படுவது கண்டறியப்பட்டால் அந்த ஆலை செயல்படுவதற்கு தடை விதிக்கப்படும். நூற்பு மில்களில் 6 அடி இடைவெளி விதிமுறையை பின்பற்ற வாய்ப்பு உள்ளது என்றும் பட்டாசு ஆலைகளில் அந்த விதிமுறை பின்பற்றப்படுவதற்கு சாத்தியப்படாது என்றும் கூறப்பட்டது. விதிமுறையை பின்பற்ற இயலவில்லை என்றால் பட்டாசு ஆலை செயல்பட அனுமதிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story