பால்கர் அருகே வதந்தியால் பயங்கரம்: கொள்ளையர்கள் என நினைத்து 3 பேர் அடித்துக்கொலை - கிராம மக்கள் வெறிச்செயல்


பால்கர் அருகே வதந்தியால் பயங்கரம்: கொள்ளையர்கள் என நினைத்து 3 பேர் அடித்துக்கொலை - கிராம மக்கள் வெறிச்செயல்
x
தினத்தந்தி 18 April 2020 4:50 AM IST (Updated: 18 April 2020 4:50 AM IST)
t-max-icont-min-icon

பால்கர் அருகே கொள்ளையர்கள்என நினைத்து 3 பேரை கிராம மக்கள் அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை, 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடைகள், வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வீடுகளில் இருந்து வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆங்காங்கே கொள்ளை சம்பவங்களும் நடந்து வருகின்றன.

இந்தநிலையில் பால்கர்மாவட்டம் கட்சின்சலே கிராமம் அருகே உள்ள தபாடி-கான்வெல் சாலையில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் கார் ஒன்று ஊரடங்கை மீறி சந்தேகப்படும் வகையில் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 3 பேர் இருந்தனர். இதனை பார்த்த கிராம மக்கள் காரில் திருடர்கள் தான் கொள்ளையடிப்பதற்காக சுற்றித்திரிவதாக கருதினர். இதனையடுத்து அந்த கிராமத்தை சேர்ந்த 100-க்கும் அதிகமானோர் ஒன்று திரண்டு அந்த காரை வழிமறித்து நிறுத்தினர்.

அடித்துக்கொலை

பின்னர் காரில் இருந்த 3 பேரையும் வெளியே இழுத்துப்போட்டு அடித்து உதைத்தனர். கற்கள் மற்றும் கையில் கிடைத்த பொருட்களை கொண்டும் சரமாரியாக தாக்கினர். மேலும் காரையும் அடித்து நொறுக்கி சூறையாடினர்.

இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த 3 பேரும்பரிதாபமாக உயிரிழந்தனர்.

விசாரணையில், பலியான 3 பேரும் மும்பையில் இருந்து வந்தது தெரியவந்தது. ஆனால் அவர்கள் யார் என்பது குறித்து அடையாளம் காணப்படவில்லை.3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பால்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் கிராம மக்கள் 100 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வதந்தி

இது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு விஜய் சாகர் கூறுகையில், “காரில் வந்தவர்கள் கும்பலால் தாக்கப்படுவது தொடர்பாக தகவல் கிடைத்ததும் உடனடியாக 3 முதல் 4 போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் கும்பலால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தவர்களை காருக்குள் ஏற்றினர். ஆனாலும் காருக்குள் நுழைந்தும் அந்த கும்பல் தாக்குதல் நடத்தியது. அதிக பேர் திரண்டு நின்று தாக்கியதால் போலீசாரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பால்கர் மாவட்டத்தில் கொள்ளை கும்பல் உலா வருவதாக வதந்தி கிளப்பட்ட நிலையில் இந்த பரிதாப சம்பவம் நடந்து உள்ளது” என்றார்.

ஊரடங்கு நேரத்தில்திருடர்கள் என நினைத்து 3 பேர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் மராட்டியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story