மதுரை சித்திரை திருவிழா ரத்து: மே 4-ந் தேதி மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறும் என அறிவிப்பு


மதுரை சித்திரை திருவிழா ரத்து: மே 4-ந் தேதி மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறும் என அறிவிப்பு
x
தினத்தந்தி 18 April 2020 5:45 AM IST (Updated: 18 April 2020 4:53 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டு உள்ளது. மே 4-ந் தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறும் என்றும், ஆனால் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மதுரை, 

தமிழகத்தில் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாக்களில் முக்கியமானது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா.

சித்திரை தேரோட்டம்

இந்த விழாவை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் மதுரைக்கு வருவார்கள். இதனால் சித்திரை திருவிழா நாட்களில் மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டு கோலாகலமாக காட்சி அளிக்கும். மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், தேரோட்டத்தின் போதும், அழகர் ஆற்றில் இறங்கும் போதும் மதுரை, மக்கள் வெள்ளத்தில் மிதக்கும்.

இந்த ஆண்டு சித்திரை திருவிழா வருகிற 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குவதாக இருந்தது.

இந்த விழாவின் போது மே 2-ந்தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகமும், 3-ந்தேதி திக்விஜயமும், 4-ந்தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணமும், 5-ந்தேதி தேரோட்டமும் நடைபெற இருந்தது.

பக்தர்கள் தரிசனத்துக்கு தடை

மதுரையை அடுத்த கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி, அங்கிருந்து கள்ளழகர் மதுரைக்கு 5-ந்தேதி புறப்பட வேண்டும். அதைத்தொடர்ந்து 6-ந்தேதி பக்தர்கள் எதிர்கொண்டு கள்ளழகரை அழைக்கும் எதிர்சேவையும், 7-ந்தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தையும் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்தநிலையில், கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாலும், நோய்த்தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாலும் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களும் ரத்துசெய்யப்பட்டு வருகின்றன.

அதிகாரி அறிக்கை

ஊரடங்கு மே 3-ந்தேதி வரை அமலில் இருக்கும் நிலையில், வருகிற 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க இருந்த மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இந்த ஆண்டு நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில், திருவிழாவை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டனர். அதன்படி, கோவில் பட்டர்கள், அதிகாரிகள், என பலதரப்பினர் தங்களின் கருத்துகளை கோவில் இணை கமிஷனர் நடராஜனிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. அதை அவர் அறிக்கையாக உடனே சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கமிஷனருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சித்திரை திருவிழா ரத்து

இந்த நிலையில், மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனர் நடராஜன் நேற்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தற்போது நிலவி வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சித்திரை பெருவிழாவையொட்டி வருகிற 25-ந்தேதி தொடங்கப்பட வேண்டிய கொடியேற்றம், தினமும் நடைபெறும் வைபவங்கள், சுவாமி திருவீதி உலாக்கள், பட்டாபிஷேகம், திக்விஜயம், திருக்கல்யாண உற்சவம் மற்றும் திருத்தேரோட்ட நிகழ்ச்சிகள் நடைபெறாது என தெரிவிக்கப்படுகிறது.

திருக்கல்யாண நிகழ்ச்சி

அனைத்து பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அவர்களுடைய திருப்திக்காகவும், தலபுராணத்தின்படியும், திருக்கல்யாண சம்பிரதாயங்கள் மட்டும் நடைபெறும்.

நித்திய பூஜைகளுடன் சேர்த்து வருகிற மே மாதம் 4-ந்தேதி காலை 9.05 மணி முதல் 9.29 மணிக்குள் சுவாமி சன்னதி முதல் பிரகாரத்தில் உற்சவ சுவாமிகள் எப்போதும் எழுந்தருளும் சேத்தி மண்டபத்தில் 4 சிவாச்சாரியார்கள் மட்டும் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி திருக்கல்யாண நிகழ்ச்சியை நடத்தி வைப்பார்கள்.

பக்தர்களுக்கு அனுமதி இல்லை

பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால், www.ma-du-r-a-i-m-e-e-n-a-ks-hi.org என்ற இணையதளம் மூலம் திருக்கல்யாண நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

திருக்கல்யாண வைபவ உற்சவத்தின் போது திருமாங்கல்ய மங்கல நாண், திருமணமான பெண்கள் புதிதாக அணிந்து கொள்ளும் மரபு உள்ளது. அவ்வாறு அணிந்து கொள்ள விரும்பும் தாய்மார்கள் தங்கள் இல்லத்திலேயே வழிபாடு நடத்தி புதிய மங்கலநாண் மாற்றிக்கொள்ள காலை 9.05 முதல் 9.29 மணி வரை உகந்த நேரம் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கள்ளழகர் கோவில் சித்திரை விழா நடைபெறுமா? அல்லது நிறுத்தப்படுமா? என்பது பற்றிய ஆலோசனை கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் என தெரிகிறது. அந்த கூட்டத்தின் முடிவில் அதுபற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று கோவில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடரும்

ஊரடங்கு மே 3-ந்தேதியுடன் முடிவடைவதால், வழக்கம் போல் இந்த ஆண்டும் மதுரை சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டு இருப்பது, ஊரடங்கு முடிந்த பின்னரும் அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடரும் என்பதையே இது காட்டுகிறது. மதுரையைப் போல், சித்திரை மாதத்தில் மற்ற ஊர்களில் நடைபெறும் தேர் திருவிழாக்களும் ரத்துசெய்யப்படும் என்று தெரிகிறது.

Next Story