தர்மபுரி மாவட்டத்தில், வாங்க ஆட்கள் வராததால் செடியிலேயே கருகும் சம்பங்கி பூக்கள் - நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
தர்மபுரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட சம்பங்கி பூக்களை வாங்க ஆட்கள் வராததால் செடிகளிலேயே கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் சம்பங்கி, குண்டுமல்லி, சாமந்தி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி அதிக அளவில் நடக்கிறது. குறிப்பாக பாப்பாரப்பட்டி, பென்னாகரம், புலிகரை, பாலக்கோடு, கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் சம்பங்கி பூ சாகுபடி விவசாயிகளால் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு சாகுபடி செய்யப்படும் சம்பங்கி பூக்கள் பெங்களூரூ உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு அனுப்பப்படுவது வழக்கம்.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக பயிரிடப்பட்ட சம்பங்கி, குண்டுமல்லி உள்ளிட்ட பூக்களின் அறுவடை மற்றும் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் சம்பங்கி பூவை பயிரிட்டால் குறைந்தபட்சம் ரூ.40 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும். ஆனால் தற்போது பூக்களை வாங்க ஆட்கள் வராததாலும், பறிக்க கூலியாட்கள் வராததாலும் சம்பங்கி பூக்களை அறுவடை செய்ய முடியாமல் செடியிலேயே கருகும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக விவசாயிகள் கூறியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் பூக்கள் சாகுபடி அதிகரிக்கும். பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பூக்களை அனுப்புவோம். பூக்களை கொள்முதல் செய்வோர் ஒவ்வொரு வாரமும் எங்களுக்கு பணத்தை கொடுத்து வந்தனர். இந்த பகுதியில் வறட்சி ஏற்படும்போது டிராக்டர்களில் தண்ணீரை விலைக்கு வாங்கி பூச்செடிகளுக்கு ஊற்றி வளர்த்து வந்தோம். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் சுப நிகழ்ச்சிகள், கோவில் விழாக்கள் என எதுவும் நடைபெறவில்லை. இதனால் பூக்களுக்கான தேவை குறைந்து விட்டது. இதன்காரணமாக பூக்களை பறிக்காமல் விடுவதால் செடிகள் ஒடிந்து சேதமடைகின்றன. வேறு வழியின்றி பூக்களை பறித்து குப்பையில் கொட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே தர்மபுரி மாவட்டத்தில் சம்பங்கி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகளை கணக்கெடுப்பு செய்து ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் தலா ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை வேண் ம்.
இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story