கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: மந்திரிகள்-மருத்துவ நிபுணர்களுடன் எடியூரப்பா அவசர ஆலோசனை


கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: மந்திரிகள்-மருத்துவ நிபுணர்களுடன் எடியூரப்பா அவசர ஆலோசனை
x
தினத்தந்தி 18 April 2020 5:56 AM IST (Updated: 18 April 2020 5:56 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மந்திரிகள், மருத்துவ நிபுணர்களுடன் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி பெற்று கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்திருப்பதாக எடியூரப்பா தொிவித்தார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக திடீரென்று அதிகரித்து வருகிறது.

கர்நாடகத்தில் கடந்த புதன்கிழமை கொரேனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 19 ஆக இருந்தது. நேற்று முன்தினம் அது 36 ஆக உயர்ந்த நிலையில் நேற்று மாநிலம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை திடீரென்று 44 ஆக உயர்ந்தது.

கர்நாடகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா பாதிப்பை தடுப்பது குறித்து மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள், மருத்துவ நிபுணர்களுடன் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

“கர்நாடகத்தில் கொரோனாவை தடுப்பது குறித்து மந்திரிகள், மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினேன். இதில் பேசிய டாக்டர்கள், கொரோனா பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால், எளிதாக சிகிச்சை அளிக்கவும், உயிரை காப்பாற்றவும் முடியும் என்று கூறினர். மாநிலத்தில் ஒரே நாளில் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வழிகாட்டு முறைகள்

சிகிச்சை முறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று டாக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். நோயாளிகள் நோய் பாதிப்பு தெரிந்திருந்தாலும், 4 நாட்களுக்கு பிறகு தான் ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள். அதனால் பொதுமக்கள் கொரோனா அறிகுறி தெரிந்த உடனேயே டாக்டர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், அவர்களுக்கு பிற பரிசோதனைகளையும் செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தர விட்டுள்ளேன். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உரிய வழிகாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளேன்.

பிளாஸ்மா சிகிச்சை

கர்நாடகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளோம். இதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். அனுமதி கிடைத்ததும் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படும். காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல் பிரச்சினை இருப்பவர்கள் உடனே கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதற்காக ஒரு தனி செல்போன் செயலி உருவாக்கப்பட்டு வருகிறது.

மாநிலத்தில் இதுவரை கொரோனா பரவாத மாவட்டங்களிலும் இத்தகைய அறிகுறி இருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. மேலும் அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் இந்த ஆய்வகம் நிறுவ வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

தெர்மல் ஸ்கேனர்

அதன்படி கர்நாடகத்தில் இந்த மாத இறுதிக்குள் இன்னும் 10 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்கப்படும். ஊரடங்கு உத்தரவு வாபஸ் ஆன பிறகு கொரோனா பாதிப்புகள் அதிகரித்தால், அதை எதிர்கொள்ள தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு தொடங்கப்படும் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை தினமும் தெர்மல் ஸ்கேனர் சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

இது தொடர்பாக ஒரு விவரமான வழிகாட்டுதலை தயாரித்து வெளியிட உள்ளோம். ஆரோக்கிய சேது செல்போன் செயலியை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். வருகிற 21-ந் தேதி மீண்டும் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி நிலைமைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும்.

அக்ரம-சக்ரம திட்டம்

கர்நாடகத்தில் இதுவரை 17 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தொடக்கத்தில் ஒரு நாளைக்கு 500 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இப்போது அந்த எண்ணிக்கை 2 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பரிசோதனையில் கர்நாடகம் தேசிய அளவில் 2-வது இடத்தில் உள்ளது. சராசரியாக 43.56 பேருக்கு நடத்தப்படும் பரிசோதனையில் ஒருவருக்கு பாதிப்பு உறுதியாகிறது. இது கேரளாவில் 44.16 பேரில் ஒருவருக்கு தொற்று ஏற்படுகிறது.

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முறைப்படுத்த அக்ரம-சக்ரம திட்டம் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கை விரைவாக முடிக்க அரசு நடவடிக்கை எடுக்கும். பெங்களூருவில் மட்டும் சுமார் 2.50 லட்சம் கட்டிடங்கள் விதிகளுக்கு மாறாக கட்டப்பட்டுள்ளது. இவற்றை முறைப்படுத்துவதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும்.”

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story