தியாகதுருகம் அருகே, மின்வாரிய ஊழியர் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ - சமூக வலைத்தளத்தில் வைரலானதால் பரபரப்பு
தியாகதுருகம் அருகே மின்வாரிய ஊழியர் ஒருவர் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ, சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
கண்டாச்சிமங்கலம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள பல்லகச்சேரி கிராமத்தில் 500-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசிக்கிறார்கள். இங்கு 2 மின்மாற்றிகள் உள்ளன. இதில் ஒரு மின்மாற்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுதடைந்தது. இதனால் சுமார் 150 வீடுகளுக்கும், விவசாய பம்புஷெட்டுகளுக்கும் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த மின்ஊழியர்கள், பல்லகச்சேரி கிராமத்துக்கு சென்று மற்றொரு மின்மாற்றி மூலம், வீடுகளுக்கும், விவசாய பம்புஷெட்டுகளுக்கும் தற்காலிகமாக மின்சாரம் வழங்கினார்கள்.
ஆனால் மின்மாற்றியை பழுதுபார்க்க வேண்டுமானால், 15 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று விவசாயிகளிடம் மின்வாரிய ஊழியர்கள் வற்புறுத்தி கேட்டு உள்ளனர். இதையடுத்து முன்பணமாக விவசாயிகளிடம் இருந்து 5 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக வாங்கி உள்ளனர். விவசாயிகளிடம் மின்வாரிய ஊழியர்கள் பணம் வாங்குவது போன்ற வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், பல்லகச்சேரி கிராமத்தில் ஒரு மின்மாற்றி பழுதடைந்துள்ளது. இதனால் அங்கு உள்ள மற்றொரு மின்மாற்றியின் மூலம் குடியிருப்புகள், தெரு மின்விளக்குகள், குடிநீர் மின் இணைப்புகள், விவசாய பம்புஷெட்டுகளுக்கு சுழற்சி முறையில் மின்வினியோகம் செய்யப்படுகிறது.
அங்கு பழுதடைந்த மின்மாற்றியை சீரமைக்க மின்வாரிய ஊழியர் ஒருவர் பணம் வாங்கியது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய ஊழியர்களிடம் விசாரிக்கப்படும். அவர் பணம் பெற்று இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story