கொரோனா பீதியால் முடக்கம்: வீட்டில் இருந்தபடியே வேலை செய்வது புதிய அனுபவமாக இருக்கிறது - ஐ.டி. இளைஞர்கள் நெகிழ்ச்சி


கொரோனா பீதியால் முடக்கம்: வீட்டில் இருந்தபடியே வேலை செய்வது புதிய அனுபவமாக இருக்கிறது - ஐ.டி. இளைஞர்கள் நெகிழ்ச்சி
x
தினத்தந்தி 18 April 2020 3:30 AM IST (Updated: 18 April 2020 8:30 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பீதியால் முடங்கி உள்ள ஐ.டி. இளைஞர்கள் தங்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்வது புதிய அனுபவமாக இருக்கிறது என்று நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

கடலூர்,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர மற்ற நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மாதம் இறுதியில் இருந்தே பெரும்பாலான அலுவலகங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணியாற்ற அனுமதி வழங்கி உள்ளன.

அதற்கு தேவையான ஏற்பாடுகளையும் அலுவலகங்கள் செய்து கொடுத்து உள்ளன. அதன்படி ஊழியர்கள் தங்கள் வீட்டில் இருந்த படியே மடிக்கணினி, கணினி மூலம் தங்களின் அன்றாட வேலைகளை கவனித்து வருகின்றனர். வேலை, வேலை என்று பணிச்சுமையால் அலுவலகத்தில் 10 மணி நேரத்திற்கு மேலாக உழைத்தார்கள். இதனால் உடல் நலம், மன நலம் பாதிக்கப்பட்டு வந்தது. எதற்கெடுத்தாலும் நேரம் இல்லை என்று கூறியவர்கள் தற்போது நேரத்தை கடத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

சிறிய பிரச்சினை என்றாலும் தங்களின் நண்பர்களை பார்த்து, கேலி, கிண்டல் செய்து அதை மறந்து வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வார்கள். இருப்பினும் அன்றாட பணிகளை முடிக்க வேண்டும் என்ற மன இறுக்கமும் அவர்களுக்குள் இருக்கும்.

இப்போது நண்பர்களை பார்க்க கூட முடியாமல் வீடியோ கால்கள் மூலம் பேசி மகிழ்கிறார்கள். எப்படி இருந்தாலும் நேரில் பார்த்து பேசி, சிரித்து மகிழ்வது போல் இருக்குமா என்ன?. அதேபோல் அலுவலகத்தில் தன்னுடைய மூத்த அதிகாரியை பார்த்து, அவர் என்ன சொல்வார் என்று ஒருவித பயத்துடன் வேலை பார்த்த அனுபவத்தை விட தற்போது வீடுகளில் இருந்து வேலை பார்ப்பது ஒரு புது அனுபவமாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

இது பற்றி சென்னை ஐ.டி.யில் வேலை பார்க்கும் கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த இளைஞர் ஹரிகரசுதன் கூறுகையில், அலுவலகத்தில் அனைத்து வித சலுகைகளும் கிடைக்கும். இருப்பினும் வேலை பளு அதிகமாக இருக்கும். இப்போது அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால் வீட்டில் இருந்து வேலை செய்கிறோம். இதனால் வேலை பளு குறைந்துள்ளது. அலுவலகமும் எங்களுக்கு பெரிதாக கட்டுப்பாடு விதிக்கவில்லை.

வீட்டில் பெற்றோரும் கொரோனா நோய் தொற்று பிரச்சினை தீரும் வரை எங்களின் கண் பார்வையிலேயே இருங்கள் என்று கூறுகின்றனர். நாங்கள் தொலை தூரங்களில் இருந்தால் எங்களை பற்றி கவலைப்பட்டு கொண்டிருப்பார்கள்.

இப்போது அவர்களுடனே இருப்பதால் பெற்றோரும் வீட்டிலேயே இருங்கள் என்கிறார்கள். பணத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதேபோல் இந்த சூழ்நிலையில் நாங்களும் பெற்றோருடன் இருப்பதையே விரும்புகிறோம்.

அலுவலகத்தில் வேலை பார்க்கும் போது கிடைக்கிற உணவை சாப்பிடுவோம். தற்போது வீட்டில் இருந்தபடியே வேலை பார்ப்பதால், நாங்கள் நினைத்த உணவை ஆரோக்கியமாக சாப்பிட முடிகிறது.

அலுவலகத்தில் வேலை பார்க்கும் போது நண்பர்களுடன் பேசுவோம். ஆனால் இப்போது தாய், தந்தை மற்றும் உறவினர்களுடன் பேசி உறவுகளை மேம்படுத்தி கொள்கிறோம். எங்களால் முடிந்த உதவிகளை பெற்றோருக்கு செய்து கொடுக்கிறோம்.

குறிப்பாக தண்ணீர் கேன் எடுத்து வருவது, சமையலுக்கு தேவையான காய்கறிகளை வெட்டி கொடுப்பது போன்ற வேலைகளை செய்து கொடுக்கிறோம். நாங்கள் வீட்டிலேயே இருப்பதால் பெற்றோர்களுக்கு தான் வேலை பளு அதிகமாக இருக்கிறது.

இருப்பினும் அவர்கள் கவலைகளை மறந்து எங்களுக்காக வேலை செய்கிறார்கள். நாங்களும் வீட்டில் இருந்தபடியே அலுவலக வேலையும் செய்து, வீட்டு வேலைகளையும் செய்கிறோம். இதுவும் ஒரு புது அனுபவமாக இருக்கிறது என்றார்.

பெங்களூரு ஐ.டி.யில் வேலை பார்க்கும் கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்த இளைஞர் திருமுருகன் கூறுகையில், ஊரடங்கு உத்தரவால் எங்களை எங்களது நிறுவனம் வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அறிவுறுத்தி உள்ளது. இதனால் நாங்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வருகிறோம். அலுவலகத்திற்கு சென்றால் அலுவலக வேலையை மட்டும் பார்ப்போம். இப்போது வீட்டு வேலையையும் சேர்த்து பார்க்க முடிகிறது. அலுவலகத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு வித மன அழுத்தத்தில் வேலை பார்ப்போம். இதனால் சாப்பாடு நேரம் கூட கடந்து வேலை பார்ப்போம். ஆனால் இப்போது பசித்தவுடன் சாப்பிடுகிறோம். அதுவும் ஆரோக்கியமான உணவை விரும்பி சாப்பிடுகிறோம். அலுவலகத்தில் வேலை பார்க்கும் போது 9 மணி நேரத்தை தாண்டி சென்று விடும். இப்போது வேலை செய்யும் நேரத்தை எங்கள் வசதிக்கு தகுந்தாற்போல் மாற்றிக்கொள்கிறோம். வீட்டில் முடங்கி கிடந்தாலும், அலுவலக வேலையும் சேர்த்து பார்ப்பதால் தெரியவில்லை. இதே நிலை நீடித்தால் சிரமம் தான். அலுவலகத்தில் பசி தீர மட்டுமே சாப்பிடுவோம். இப்போது வீட்டு சாப்பாட்டை ருசித்து சாப்பிடுகிறோம். இந்த அனுபவத்தை மறக்க முடியாது என்றார்.

Next Story