டாஸ்மாக் கடைகள் மூடல்: ரூ.7 கோடி மதுபாட்டில்கள், திருமண மண்டபத்தில் பூட்டி ‘சீல்’ வைப்பு


டாஸ்மாக் கடைகள் மூடல்: ரூ.7 கோடி மதுபாட்டில்கள், திருமண மண்டபத்தில் பூட்டி ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 18 April 2020 9:11 AM IST (Updated: 18 April 2020 9:11 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதையொட்டி, ரூ.7 கோடி மதிப்பிலான மதுபாட்டில்கள் திருமண மண்டபத்தில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

திருச்சி, 

திருச்சியில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதையொட்டி, ரூ.7 கோடி மதிப்பிலான மதுபாட்டில்கள் திருமண மண்டபத்தில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல்

திருச்சி மாநகரம், புறநகர் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள், பார்கள் உள்ளன. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மாதம் 25-ந் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அரசின் டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்பட்டு விட்டன.

இதனால், மதுபிரியர்கள் கடும் திண்டாட்டத்திற்கு உள்ளானார்கள். சில இடங்களில் மதுக்கடையை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டுபோனது. இன்னும் சில இடங்களில் டாஸ்மாக் மேற்பார்வையாளர்களே கடையை திறந்து கள்ளத்தனமாக மதுபாட்டில்களை விற்பனை செய்ய தொடங்கினர். திருச்சி அருகே மணிகண்டத்தில் டாஸ்மாக் கடையை திறந்து மொத்தமாக மது விற்ற மேலாளர் உள்பட சிலர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

பூட்டி சீல் வைப்பு

இந்தநிலையில் தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபாட்டில்களை அப்புறப்படுத்தி மறு அறிவிப்பு வரும்வரை பாதுகாப்பாக வைப்பதற்கு மண்டல பொதுமேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, திருச்சி புறநகர் பகுதி கடைகளில் உள்ள டாஸ்மாக் கடை மதுபாட்டில்கள் கள்ளிக்குடி வணிக வளாக கட்டிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

அதுபோல திருச்சி மாநகரில் உல்ல 56 டாஸ்மாக் கடைகளில் உள்ள மது பாட்டில்கள் அடங்கிய 19 ஆயிரம் பெட்டிகள், நேற்று இரவு போலீஸ் பாதுகாப்புடன் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு திருச்சி பழைய கலையரங்க திருமண மண்டபத்தில் இறக்கப்பட்டன.

அங்கு மாவட்ட மேலாளர் துரைமுருகன், குடோன் மேலாளர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் கடைவாரியாக தனித்தனியாக அடுக்கி வைக்கப்பட்டன. பின்னர் திருமண மண்டபம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.


Next Story