கரூர் அரசு மருத்துவமனையில் 1,600 பேருக்கு கொரோனா பரிசோதனை அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட 78 பேர் வீடு திரும்பினர்
கரூர் அரசு மருத்துவமனையில் இதுவரை 1600 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட 78 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கரூர்,
கரூர் அரசு மருத்துவமனையில் இதுவரை 1600 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட 78 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
சளி-ரத்த பரிசோதனை
கரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு கரூர், காந்திகிராமம், புலியூர், பள்ளப்பட்டி, குளித்தலை, தோகைமலை உள்ளிட்ட இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட வீதிகள் உள்ளன. மருத்துவக்குழு மூலம் அந்த வீதிகளில் வசிப்பவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கும், தொற்று உள்ளவர்களோடு தொடர்பில் இருந்தவர்களுக்கும் சளி மற்றும் ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்படுவதை கரூர் நகராட்சிக்குட்பட்ட நீலிமேடு பகுதியில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கொரோனா தொற்று காரணமாக அரசு மருத்துவமனையில் கரூரைச் சேர்ந்த 41 பேர் தொடக்கத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் தொற்று பாதித்த நிலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் 18 பேர் பூரண குணமடைந்து அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், தொற்று பாதித்த நிலையில் அனுமதிக்கப்பட்ட திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 26 பேரும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 6 பேரும் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், ரத்த பரிசோதனையில் தொற்று இல்லாத நபர்கள் 27 பேர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொற்று இல்லை என்பதை உறுதிசெய்தபின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
50 சதவீதம் பேர் குணமடைந்தனர்
இதுவரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 149 பேரில், 78 பேர் அதாவது, அனுமதிக்கப்பட்டவர்களில் ஏறக்குறைய 50 சதவீதம்பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள நபர்களில் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும் நபர்களுக்கு சளி மற்றும் ரத்த மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பரிசோதனையின் முடிவில் தொற்று இருப்பது உறுதிசெய்யப்படும் நபர்களோடு தொடர்பில் இருந்தவர்களுக்கும் ரத்தம் மற்றும் சளி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை துணை இயக்குனர் தலைமையில், கொரோனா தொற்றை ரத்தம் மற்றும் சளி பரிசோதனை செய்து கண்டறிய பிரத்யேக பயிற்சி பெற்ற 27 பரிசோதகர்களும், 10 மருத்துவர்கள், 15 செவிலியர்கள் என மொத்தம் 52 பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை சுமார் 1,600 பேருக்கு சளி மற்றும் ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குளித்தலை
குளித்தலை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ஒரு பெண் சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். சென்னையில் அவருடன் தங்கியிருந்த ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது சென்னையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த பெண்ணுக்கும் கொரோனா தொற்று இருக்குமா என்ற சந்தேகத்தின்பேரில் குளித்தலை அண்ணாநகரில் தனது வீட்டில் இருந்த அந்த பெண்ணை மருத்துவக்குழுவினர் நேற்று முன்தினம் பரிசோதனை செய்தனர். அப்பெண்ணின் தொண்டைசளி மற்றும் ரத்த மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்து சென்றனர். மேலும் அவருக்கு ஆலோசனைகள் கூறி தனிமையில் இருக்கும்படி கூறிச்சென்றனர். அதேபோல குளித்தலை அரசு மருத்துவமனை மற்றும் குளித்தலை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பரிசோதனைக்காக வரும் மற்றும் அனுமதிக்க பட்டுள்ள கர்ப்பிணி பெண்களுக்கும் கொரோனா நோய்தொற்று உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story