கொடைக்கானல் அருகே, ‘யூடியூப்’ வீடியோ பார்த்து சாராயம் காய்ச்சிய 4 பேர் கைது


கொடைக்கானல் அருகே, ‘யூடியூப்’ வீடியோ பார்த்து சாராயம் காய்ச்சிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 18 April 2020 12:25 PM IST (Updated: 18 April 2020 12:25 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் அருகே ‘யூடியூப்’ வீடியோ பார்த்து சாராயம் காய்ச்சிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொடைக்கானல்,

ஊரடங்கு உத்தரவு காரணமாக டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மது கிடைக்காமல் மது பிரியர்கள் தவித்து வருகின்றனர். மேலும் போதைக்காக மாற்று வழிகளை தேடி வருகின்றனர். அதன்படி கொடைக்கானல் அருகே பெருங்காடு கிராமத்தை ஒட்டியுள்ள அடர்ந்த வனப்பகுதியில் இளைஞர்கள் சிலர் சாராயம் காய்ச்சுவதாக போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் காதர்மைதீன், ஏட்டுகள் காசிநாதன், சீனிவாசன், பாலு ஆகியோர் அடங்கிய குழுவினர் அங்கு சென்றனர். ஆனால் அடர்ந்த வனப்பகுதியாக இருந்ததன் காரணமாக சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் போலீசார் நடந்து சென்று, அங்கு பதுங்கியிருந்த 4 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர்கள் பெருங்காட்டை சேர்ந்த ராமன் மகன் வல்லரசு (வயது 32), அளத்துறை கிராமத்தை சேர்ந்த காந்தி மகன் விருமாண்டி (33), மாயாண்டி மகன் பாண்டி (30), பெருமாள் மகன் தினேஷ் (26) என்பதும், மது குடிக்க முடியாததால், ‘யூடியூப்’ வீடியோவை பார்த்து குக்கர் மூலம் சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 70 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் குக்கர்கள், சாராய ஊறல் போடுவதற்காக வைத்திருந்த பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story