ஊரடங்கால் வருமானமின்றி தவிப்பு: காய்கறி வியாபாரிகளாக மாறிய ஆட்டோ டிரைவர்கள்
ஊரடங்கால் வருமானம் இன்றி தவிக்கும் ஆட்டோ டிரைவர்கள் காய்கறி வியாபாரிகளாக மாறினர்.
சின்னாளபட்டி,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதனால் பெரும்பாலான தொழில்கள் நலிவடைந்து உள்ளன. இந்த தொழில்களை நம்பியிருந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளனர். அதன்படி தினமும் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வரும் டிரைவர்கள் அந்த வரிசையில் உள்ளனர்.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து ஆட்டோக்கள் ஓடாததால் டிரைவர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர். பெரும்பாலான ஆட்டோ டிரைவர்கள் வங்கி கடனில் ஆட்டோ வாங்கி மாதந்தோறும் இ.எம்.ஐ. செலுத்தும் நிலையில் உள்ளனர். சிலர் ஆட்டோக்களுக்கு டிரைவர்களாக மட்டுமே இருந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஆட்டோ ஓடாததால் குடும்பத்தை நடத்த முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கின்றனர்.
சின்னாளபட்டி, செம்பட்டி பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களின் நிலை இதுதான். இதனால் தினசரி குடும்பத்தை ஓட்ட முடியாத நிலையில் பெரும்பாலான ஆட்டோ டிரைவர்கள் காய்கறி வியாபாரிகளாக மாறிவிட்டனர். சின்னாளபட்டியை பொறுத்தவரை சுமார் 30-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் தங்களது ஆட்டோக்களில் காய்கறிகளை வாங்கி வந்து தெரு, தெருவாக சென்று விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து ஆட்டோ டிரைவர் பாலமுருகன் கூறுகையில், ஆட்டோ ஓட்டியபோது தினசரி டீசல் செலவு போக ரூ.300 முதல் ரூ.500 வரை வருமானம் கிடைக்கும். குடும்பத்தை நடத்தவும், வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவும் போதுமானதாக இருந்தது. ஊரடங்கால் ஆட்டோக்கள் முழுவதும் ஓடவில்லை. குடும்பத்தை நடத்த முடியாத சூழலில், வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஊரடங்கு பிறப்பித்த நாளில் இருந்து காய்கறி வாங்கி விற்பனை செய்ய தொடங்கி விட்டேன். தினமும் அதிகாலை 5 மணிக்கு திண்டுக்கல் சென்று மார்க்கெட்டில் காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கி வந்து தெரு, தெருவாக சென்று மதியம் 1 மணி வரை விற்பனை செய்கிறேன். ஒவ்வொருவரின் வீடுகளுக்கே நேரில் சென்று விற்பனை செய்வதால் எங்களுக்கு அமோக வரவேற்பு கிடைக்கிறது. எல்லா செலவும் போக ரூ.200 முதல் ரூ.300 வரை வருமானம் கிடைக்கிறது. இது குடும்ப செலவுக்கு போதுமானதாக உள்ளது என்றார்.
Related Tags :
Next Story