தூத்துக்குடியில் 28 ஆயிரம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி - அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்


தூத்துக்குடியில் 28 ஆயிரம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி - அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 19 April 2020 4:15 AM IST (Updated: 18 April 2020 10:45 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் 28 ஆயிரம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வினியோகத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி 3-வது மைலில் உள்ள ரேஷன் கடையில் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அரசின் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., சின்னப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் ஆகியவற்றை வழங்கி தொடங்கி வைத்தார். மொத்தம் 28 ஆயிரத்து 198 பேருக்கு இந்த நிவாரண உதவி வழங்கப்படுகிறது.

தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் 2 ஆயிரம் பேருக்கு எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. சார்பில் 10 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு ஆகியவற்றை வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது. ஆணையாளர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவியை வழங்கினார்.

மேலும் முதல்-அமைச்சர் திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரணத்தொகை ரூ.1000 வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 185 திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரணத்தொகை ரூ.1000 வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் சார்பில் 1,250 கிலோ அரிசி, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு தேவையான படுக்கைகள் வாங்குவதற்கு ரூ.2 லட்சத்துக்கான காசோலை ஆகியவற்றை ஸ்பிக் நிறுவன இயக்குனர் ராமகிருஷ்ணன், அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன், மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர் சுதாகர், மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதா, தொழிலாளர் துணை ஆணையர் அப்துல்காதர் சுபைர், உதவி ஆணையர் பாலமுருகன், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்வக்குமார், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், மாநகராட்சி செயற்பொறியாளர் பார்த்திபன், உதவி செயற்பொறியாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story