நெல்லையில் அதிரடி நடவடிக்கை: முக கவசம் - அனுமதி அட்டை இல்லாதவர்களுக்கு அபராதம் - ஒரே நாளில் ரூ.11 ஆயிரம் வசூல்


நெல்லையில் அதிரடி நடவடிக்கை: முக கவசம் - அனுமதி அட்டை இல்லாதவர்களுக்கு அபராதம் - ஒரே நாளில் ரூ.11 ஆயிரம் வசூல்
x
தினத்தந்தி 19 April 2020 4:15 AM IST (Updated: 18 April 2020 11:16 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் அதிரடி நடவடிக்கையாக அனுமதி அட்டை இல்லாமலும், முக கவசம் அணியாமலும் வெளியே வந்தவர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டது. இதில் நேற்று ஒரே நாளில் ரூ.11 ஆயிரத்து 200 வசூல் ஆனது.

நெல்லை, 

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதையும் மீறி மக்கள் வெளியே வருவதால் நெல்லையில் பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது. அதன்படி, வாரத்துக்கு 2 நாட்கள் மட்டுமே வெளியே வந்து அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. அதற்காக ஒவ்வொரு வீட்டுக்கும் சிகப்பு, நீலம், பச்சை ஆகிய 3 நிறங்களில் அனுமதி அட்டை வழங்கப்பட்டு உள்ளது.

அந்த அட்டையில் எந்த நாளில் வந்து பொருட்கள் வாங்க வேண்டும் என அச்சிடப்பட்டு உள்ளது. அதேபோல் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நடைமுறையை தீவிரமாக பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். இதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஷில்பா அறிவித்தார்.

இதையடுத்து நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவின்படி, மாநகர பகுதி முழுவதும் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் மேற்பார்வையிலும், தச்சநல்லூர் மண்டல உதவி ஆணையாளர் அய்யப்பன் மேற்பார்வையிலும் அந்தந்த பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்தனர்.

வாகனங்களில் பொருட்கள் வாங்க வந்தவர்களை, அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அனுமதி அட்டையை கேட்டனர். அட்டை இல்லாதவர்களுக்கு உடனடியாக ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கும் ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. நெல்லை மாநகர பகுதியில் உள்ள 4 மண்டலங்களிலும் அதிகாரிகளும், போலீசாரும் இந்த அதிரடி நடவடிக்கையை தொடங்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அதிரடி சோதனையில் அனுமதி அட்டை இல்லாமலும், முக கவசம் அணியாமலும் வந்த 112 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன்மூலம் நேற்று ஒரே நாளில் ரூ.11 ஆயிரத்து 200 அபராதம் வசூலிக்கப்பட்டது.

எனவே, அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியில் வரும் பொதுமக்கள் அபராதத்தை தவிர்க்கும் பொருட்டு தங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி அட்டையுடன் முக கவசம் அணிந்து வரவேண்டும். மேலும், சமூக இடைவெளியை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

Next Story