ஊரடங்கு காரணமாக மரவள்ளி கிழங்கு அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதி


ஊரடங்கு காரணமாக மரவள்ளி கிழங்கு அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதி
x
தினத்தந்தி 19 April 2020 3:45 AM IST (Updated: 19 April 2020 12:59 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு உத்தரவு காரணமாக மரவள்ளி கிழங்கு அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

அந்தியூர், 

ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலானோர் விவசாயம் செய்து வருகிறார்கள். நெல், வாழை, கரும்பு, மஞ்சள், மரவள்ளி கிழங்கு, மல்பெரி, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் மரவள்ளி கிழங்கு குறைந்த தண்ணீரில் சிறந்த லாபம் தரும் பணப்பயிராக உள்ளதால், விவசாயிகள் ஏராளமானோர் சாகுபடி செய்துள்ளனர். அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அத்தாணி, ஆப்பக்கூடல், பர்கூர் உள்ளிட்ட இடங்களில் மரவள்ளி அதிகஅளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. 10 மாத பயிரான மரவள்ளியை 1,000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

இங்கு விளைந்துள்ள மரவள்ளி கிழங்கு மூலமாக வெள்ளை ரவை, மைதா, ஜவ்வரிசி ஆகிய பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு காரணமாக ஜவ்வரிசி ஆலைகள் மூடப்பட்டு உள்ளன. மேலும், விவசாய கூலித்தொழிலாளர்கள் கிடைக்காததால் மரவள்ளி கிழங்குகள் அறுவடை செய்யப்படாமல் கிடக்கிறது. இதனால் மரவள்ளி சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்னனர்.

இதுகுறித்து பர்கூரில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்துள்ள விவசாயி ஒருவர் கூறியதாவது:-

மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்ய குறைந்தபட்ச தண்ணீர் இருந்தாலே போதுமானது. இதனால் நாங்கள் சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்தி சாகுபடி செய்துள்ளோம். மரவள்ளி கிழங்குகள் 10 மாதங்களில் நன்கு வளர்ச்சி அடைந்துவிடும். இங்கு அறுவடை செய்யப்படும் கிழங்குகள் அம்மாபேட்டை, எண்ணமங்கலம், சேலம் மாவட்டம் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் ஜவ்வரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைப்போம்.

இதேபோல் கர்நாடகா மாநிலத்துக்கும் அனுப்பி வைக்கப்படும். அங்கு ரவை, மைதா, ஜவ்வரிசி போன்ற உணவு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் இருந்து கிடைக்கும் கழிவுகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. அதில் கொழுப்பு, மாவு, புரத சத்துகள் அதிகமாக உள்ளன.

இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் தொழிற்சாலைகளில் இருந்து மரவள்ளியை கொள்முதல் செய்வது கிடையாது. மேலும், கூலி ஆட்கள் கிடைக்காமல் பெரும் சிரமப்படுகிறோம். 10 மாதங்களில் வெட்டி எடுத்தால்தான் ஒரு டன்னுக்கு ரூ.8 ஆயிரம் வரை விலை கிடைக்கும். 

தாமதமானால் கிழங்கின் பால்தன்மை குறைந்து விறகுபோல் மாறிவிடும். இதனால் கிழங்குக்கு உரிய விலை கிடைக்காத நிலை ஏற்படும். மேலும், கால்நடைகளுக்கு கூட பயன்படுத்த முடியாத சூழல் உருவாகும். இதன் காரணமாக பெரிய நஷ்டத்தை சந்திக்கும் விளைவு ஏற்படும். ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பிறகுதான் விவசாய கூலித்தொழிலாளர்கள் வேலைக்கு வருவார்கள். அதன்பிறகு நிலைமை சீராகும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story