கொரோனா கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டதற்கு சம்பளம் தராததால் கல்லூரி மாணவர்கள் முற்றுகை போராட்டம்


கொரோனா கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டதற்கு சம்பளம் தராததால் கல்லூரி மாணவர்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 19 April 2020 3:53 AM IST (Updated: 19 April 2020 3:53 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூர் மண்டலத்தில் கொரோனா கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டதற்கு சம்பளம் தராமல் ஏமாற்றும் மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து கல்லூரி மாணவ-மாணவிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர், 

திருவொற்றியூர் மண்டலத்தில் இதுவரை 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தற்போது ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலரது வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருவதோடு, கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சமூக பரவல் மூலம் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதா? என்பதை கண்டறிய பொதுமக்களுக்கு பரிசோதனை செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதன்படி கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள எண்ணூரில் வசிக்கும் பொதுமக்களின் விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பொதுமக்களின் விவரங்களை சேகரிக்க சம்பளம் அடிப்படையில் தற்காலிகமாக 25-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் வாலிபர்களை திருவொற்றியூர் மண்டல அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தினர்.

இதற்காக நபர் ஒருவருக்கு ரூ.400 சம்பளமாக தருவதாக அதிகாரிகள் தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இவ்வாறு பணியில் ஈடுபடுத்தப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் கூறியபடி சம்பளம் தரவில்லை என்று தெரிகிறது.

முற்றுகை போராட்டம்

இதனால் ஆத்திரம் அடைந்த கல்லூரி மாணவ- மாணவிகள் நேற்று எண்ணூரில் உள்ள மாநகராட்சி பகுதி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் கூறியபடி தங்களுக்கு சம்பளம் வழங்கவேண்டுமென்று கூறி அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அதிகாரிகள் சமாதானம் செய்து அனைவரையும் கலைந்து போக செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story