கொரோனாவெல்லாம் வராது... எங்க மக்களை அவங்க பார்த்துக்குவாங்க.. வவ்வால்களை பாதுகாத்து தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்


கொரோனாவெல்லாம் வராது... எங்க மக்களை அவங்க பார்த்துக்குவாங்க.. வவ்வால்களை பாதுகாத்து தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்
x
தினத்தந்தி 19 April 2020 4:12 AM IST (Updated: 19 April 2020 4:12 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவெல்லாம் எங்க கிராமத்துக்கு வராது. எங்க மக்களை அவங்க(வவ்வால்கள்) பார்த்துக்குவாங்க... என்று கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியிலும் வவ்வால்களை பாதுகாத்து கிராம மக்கள் தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.

கொள்ளிடம், 

கொரோனாவெல்லாம் எங்க கிராமத்துக்கு வராது. எங்க மக்களை அவங்க(வவ்வால்கள்) பார்த்துக்குவாங்க... என்று கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியிலும் வவ்வால்களை பாதுகாத்து கிராம மக்கள் தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.

3 தலைமுறைகளாக தெய்வமாக வழிபடுகிறார்கள்

உலகையே இன்று புரட்டிப்போட்டு அனைத்து நாடுகளையும் பீதியில் உறையச்செய்துள்ள கொரோனா வைரஸ், சீனாவில் உள்ள உகான் மாநிலத்தில் இருந்து பரவியதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் வவ்வால்களில் இருந்து பரவியதாக கூறப்படுவதால் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகள் அனைத்தின் பார்வையும் வவ்வால்கள் மீது திரும்பி உள்ளது. வவ்வால் என்ற பெயரை கேட்டாலே மக்கள் அலறுகிறார்கள்.

இந்த நிலையில், வவ்வால்களையே தெய்வமாக ஒரு கிராம மக்கள் வழிபட்டு வருகிறார்கள் என்று கேள்விப்பட்டு அவர்களின் நம்பிக்கையை தெரிந்து கொள்வதற்காக அந்த கிராமத்திற்கு சென்றோம். அந்த கிராமத்தில் வசித்து வரும் மக்களிடம் வவ்வால்களால் கொரோனா பரவிவருவதாக கூறப்படும் சூழலில், நீங்கள் வவ்வால்களையே தெய்வமாக வழிபட்டு வருகிறீர்களாமே... என்று கேட்டோம்.

அதற்கு அவர்கள், கொரோனாவா... அதெல்லாம் எங்களுக்கு வராது... எங்களை அவங்க(வவ்வால்கள்) பார்த்துக்குவாங்க... என்று கூறினார்கள். வவ்வால்களை மூன்று தலைமுறைகளாக பாதுகாத்து தெய்வமாக வழிபட்டு வரும் அந்த கிராம மக்களின் வினோத நம்பிக்கையையும், வவ்வால்கள் மீதான அவர்களின் பற்றுக்கான காரணம் குறித்தும் இங்கே பார்ப்போம்!

பழந்தின்னி வவ்வால்கள்

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே குன்னம் ஊராட்சிக்கு உட்பட்டது பெரம்பூர் கிராமம். இயற்கை எழில் சூழ்ந்த இந்த கிராமத்தில் வயல்வெளி பகுதியில் வவ்வாலடி என்ற இடம் உள்ளது. இங்கு 200 ஆண்டுகள் பழமையான ஒரு ஆலமரம் உள்ளது. இந்த மரத்தில் 1000-க்கும் மேற்பட்ட பழந்தின்னி வவ்வால்கள் வசித்து வருகின்றன. பாலூட்டி வகையை சேர்ந்த இந்த வவ்வால்கள், உலகிலேயே பெரிய வவ்வால் வகையை சேர்ந்ததாகும். இங்குள்ள வவ்வால்கள், இரை தேடி இரவு நேரங்களில் சுமார் 48 கி.மீட்டர் தூரம் வரை சென்று தங்களுக்கு தேவையான பழங்களை சாப்பிட்டு விட்டு மீண்டும் பகல் நேரத்தில் இந்த ஆலமரத்திற்கு வந்து சேர்ந்து விடும். வவ்வால்கள் ஒவ்வொன்றும் குறைந்தது ஒரு கிலோ எடை முதல் அதிகபட்சமாக 2 கிலோ எடை வரையில் இருக்கும். இது இரைகளை வாய்வழியாக உண்டு, வாய் வழியாகவே தனது கழிவுகளையும் வெளியேற்றும் தன்மையுடையது. இந்த வவ்வால்கள் இங்கு அதிகமாக இருப்பதால், இந்த பகுதியில் உள்ள விளைநிலங்கள் செழிப்பாக வளர்வதாகவும் அந்த கிராம மக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறியதாவது:-

விளைநிலங்கள் செழிப்பாக உள்ளது

இங்குள்ள ஆலமரத்தில் தங்கியுள்ள பழந்தின்னி வவ்வால்களை நாங்கள் தெய்வமாக வழிபடுகிறோம். இந்த வவ்வால்களை எங்கள் கிராம மக்கள் மூன்று தலைமுறைகளாக பாதுகாத்து வருகின்றனர். இங்கு அதிகமாக வவ்வால்கள் இருப்பதால் எங்கள் கிராம பகுதியில் உள்ள விளைநிலங்கள் செழிப்பாக உள்ளது. இதற்கு வவ்வால்கள் இடும் எச்சம்தான் காரணமாகும்.

இதனால் எங்கள் பகுதியில் எப்போதும் மூன்று போகம் நெல் சாகுபடி பணியை மேற்கொண்டு வருகிறோம். மேலும், எங்கள் கிராமம் செழிப்பாகவும், நிறைய மரம், செடி கொடிகள் வளர்வதற்கும் உகந்ததாகவும் உள்ளது.

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க மாட்டோம்

அதிகமாக சத்தம் கேட்டால் வவ்வால்கள் இங்கிருந்து சென்றுவிடுமோ என்ற காரணத்தால் எங்கள் கிராமத்தில் தீபாவளி பண்டிகை அன்று கூட யாரும் பட்டாசு வெடிப்பதில்லை.

மேலும் எங்கள் கிராமத்தில் உள்ள வவ்வால்கள் மற்றும் பறவைகளை யாராவது வேட்டையாட முயற்சித்தால் உடனே அவர்களை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைப்போம். இதற்காக இளைஞர்களை கொண்ட ஒரு குழு அமைத்து வவ்வால்களை பாதுகாத்து வருகிறோம்.

கொரோனாவெல்லாம் வராது...

தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், வவ்வால்களின் எச்சத்தால் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் இங்குள்ள வவ்வால்களால் கொரோனா வைரஸ் ஏற்படாது என்று நாங்கள் முழுமையாக நம்புகிறோம்.

ஏனெனில் அவர்கள்(வவ்வால்கள்) எங்கள் காவல் தெய்வம். எங்களையெல்லாம் அவங்க(வவ்வால்கள்) பார்த்துக்குவாங்க... இதுவரையில் எங்கள் கிராமத்தில் உள்ள பெரியவர்களையும், சிறியவர்களையும், குழந்தைகளையும் அவங்கதான் பாதுகாத்து வர்றாங்க... இந்த நம்பிக்கை எங்கள் கிராமத்தில் உள்ள ஒவ்வொருவர் மனதிலும் உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பாராட்டு

வவ்வால்களால் பரவியதாக கூறப்படும் கொரோனா வைரசைக் கண்டு உலகமே ஒருபுறம் ஆட்டம் கண்டுள்ள நிலையில் அதைப்பற்றிய பயம் சிறிதளவும் இல்லாமல் எல்லா பாரத்தையும் தங்கள் காவல் தெய்வமான வவ்வால்களின் தலையில் சுமத்தி விட்டு ‘ஹாயாக’ இருக்கும் இந்த கிராம மக்களின் அசாத்திய நம்பிக்கையை நாம் பாராட்டி விட்டு அங்கிருந்து விடைபெற்றோம்.

Next Story