சீர்காழியில், ஊரடங்கை பயன்படுத்தி போலீஸ் கணவருடன் சேர்ந்து கடைகளில் பணம் வசூல் செய்த பெண் இன்ஸ்பெக்டர்
சீர்காழியில், ஊரடங்கை பயன்படுத்தி போலீஸ்கார கணவருடன் சேர்ந்து கடைகளில் பணம் வசூல் செய்தார் பெண் இன்ஸ்பெக்டர்.
சீர்காழி,
சீர்காழியில், ஊரடங்கை பயன்படுத்தி போலீஸ்கார கணவருடன் சேர்ந்து கடைகளில் பணம் வசூல் செய்தார் பெண் இன்ஸ்பெக்டர். இருவரையும் பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.
ஊரடங்கு உத்தரவு
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசின் சார்பில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அது நடைமுறையில் இருந்து வருகிறது. மருந்து கடைகள், மளிகை கடைகள், காய்கறி கடைகள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த ஊரடங்கை பயன்படுத்தி போலீஸ்கார கணவருடன் சேர்ந்து கடைகளில் பணம் வசூல் செய்தார் ஒரு பெண் இன்ஸ்பெக்டர். இதன் காரணமாக இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:-
கணவர்-போலீஸ்காரர், மனைவி-இன்ஸ்பெக்டர்
நாகை மாவட்டம் சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் ஸ்ரீபிரியா. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியாவிற்கு கொரோனா பாதுகாப்பு பணி வழங்கப்பட்டது. இதனால் இவர் கடந்த சில நாட்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.
இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியாவின் கணவர் பெயர் சோமசுந்தரம். இவர், திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, தனது கணவர் சோமசுந்தரத்துடன் தங்களுக்கு சொந்தமான காரில் சீர்காழியில் உள்ள பல்வேறு கடைகளுக்கு சென்று உள்ளார்.
கடைகளில் பணம் வசூல்
அந்த கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம் கூடுவதாக கடைக்காரர்களை மிரட்டி கடந்த சில நாட்களாக தொடர்ந்து பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்கள், இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான அதிகாரி ஒருவர் சீர்காழி வந்து கடைக்காரர்களிடம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் பெண் இன்ஸ்பெக்டர் தனது கணவருடன் சேர்ந்து பணம் வசூல் செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர், தனது விசாரணை அறிக்கையை உயர் அதிகாரிகளிடம் அளித்தார்.
பணியிடை நீக்கம்
பெண் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியாவும், அவரது கணவர் சோமசுந்தரமும் கடைக்காரர்களிடம் பணம் வசூல் செய்தது விசாரணையில் தெரிய வந்ததையடுத்து இருவரையும் பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story